தூத்துக்குடிக்கு வந்த 4 போர்க்கப்பல்கள்.. கடலோரப் பாதுகாப்புக்காக!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்புக்காக நான்கு போர்க்கப்பல்கள் வந்துள்ளன. விஜயநாராயணம் கடற்படைத் தள அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலுக்கு பிறகு கடல் வழி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடங்குளம், மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய பகுதியில் கிளைடர் விமானம் பறந்ததாக கூறப்பட்ட பின்னர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடற்படை கப்பல்கள் அடிக்கடி ஆழ்கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுகன்யா தூத்துக்குடிக்கு வந்து சென்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் டிகா, ஐஎன்எஸ் சர்துல், ஐஎன்எஸ் வீர் ஆகிய 4 நான்கு போர்க்கப்பலகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன.
இதுகுறித்த விபரங்கள் துறைமுக அதிகாரிகள் மற்றும் கடலோர அதிகாரிகள் தவிர மற்ற துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. மகேந்திரகிரி, கூடங்குளம் அணு உலையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய கடற்படை கப்பல் ஓன்றை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்யவே அடிக்கடி போர்கப்பல்கள் வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று வந்துள்ள நான்கு போர்க்கப்பல்களின் அதிகாரிகள் விஜயநாரயணம் கடற்படை தள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் கயத்தாறு அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்பாட்டில் இருந்த பழைமையான இரட்டை ஆலமர விமான தளம் புதுப்பிக்கப்பட இருப்பதாகவும், வாகைகுளம் விமான நிலையம் அருகே கடற்படைக்கு சொந்தமான டோனியர் ரக விமானம் இறங்தும் வகையில் சிறிய விமான தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications