பாக்கெட் சாராயத்தை வீணாக்க மனமில்லை; செய்தியை பார்த்துவிட்டு இரவில் சாராயம் குடித்த 5 பேர் பாதிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 37 பேர் மரணமடைந்த செய்தியை பார்த்துவிட்டு வீட்டில் இருப்பு வைத்திருந்த கள்ளச்சாராயத்தை இரவில் குடித்ததாக கூறி மேலும் 5 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சுரேஷ் என்பவர் எதற்காக உயிரிழந்தார் என தெரியாமல் துக்க வீட்டில் விநியோகிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு அடுத்தடுத்து பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இங்குதான் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்தன. மேலும் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த போதே இதை கள்ளச்சாராய மரணமில்லை என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் அவர்கள் குடித்த சாராயத்தில் எத்தனால் கலந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் முன்னதாகவே சிலர் பாக்கெட் சாராயத்தை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அது போன்று கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீட்டில் பாக்கெட் சாராயத்தை இருப்பு வைத்திருந்தனர்.
நேற்றைய தினம் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சிலர் மரணம் அடைந்ததாக டிவியில் ஒளிபரப்பான காட்சிகளை பார்த்த சிலர் வீடுகளில் வாங்கி வைத்த பாக்கெட் சாராயத்தை வீணடிக்க மனமில்லாமல் சிலர் தங்கள் வீட்டில் வாங்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தை இரவோடு இரவாக குடித்துள்ளனர்.
அவ்வாறு இரவு கள்ளச்சாராயத்தை குடித்ததாக பெண் உள்பட 5 பேர் புதிதாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக சுமார் 127 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இன்று காலை வரை பலியானோரின் எண்ணிக்கை 29ஆக இருந்த நிலையில் தற்போது சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் என்பவர் பலியாகிவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துவிட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் எனும் கண்ணுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அவருடைய தம்பி தாமோதரனும் கைது செய்யப்பட்ட நிலையில் கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications