குற்றாலம் மெயின் அருவியில் நடந்த விபரீதம்.. சுற்றுலா பயணிகள் 5 பேர் படுகாயம்! குளிக்க தடை!
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் இன்று குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கல் உருண்டு விழுந்து 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை அடுத்து பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் விழும் நீர் பல்வேறு மூலிகைகள் கலந்து வருவதால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சீசன் காலங்களில் மட்டுமல்லாது சாதாரண நாட்களில் கூட குற்றாலம் அருவிகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். குற்றாலம் மெயின் அருவி, சிற்றறுவி, ஐந்தருவி, குண்டாறு நீர்வீழ்ச்சி, புலியருவி, பழைய குற்றாலம், செண்பகா தேவி அருவி ஆகிய அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவி வருகிறது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டி வருகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருவியின் மேலே இருந்து கீழே உருண்டு வந்த கல் விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஆண்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடையநல்லூரை சேர்ந்த உதுமான் மைதீன், புனலூரை சேர்ந்த ஜமால், புனலூரை சேர்ந்த பிஜு, தென்காசியை சேர்ந்த அருண்குமார், அறந்தாங்கியை சேர்ந்த கணேசன் ஆகிய 6 பேரும் கல் விழுந்து காயம் அடைந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலைப்பகுதியில் இருந்து திடீரென உருண்டு வந்த கல்லால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர், அருவி விழும் பகுதியின் மேல் செடி, வேர், சிறிய கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications