டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. திருப்பத்தூர் அருகே சோகம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திருப்பத்தூர் அருகே வசித்து வருபவர் உதயகுமார். இவரது மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு கவியரசு என்று 9 வயது மகன் இருந்தான். அருகில் உள்ள பள்ளியில் மாணவன் கவியரசு 5 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவன் கவியரசு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
அங்கு சிறுவன் கவியரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுவன் உயிரிழந்தான். இதைக்கேட்டது அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல்: டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் ஆகும். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி' என்ற கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகின்றன. ஏடிஸ்' கொசுக்கள் 3 வாரங்களுக்கு மேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டது இந்த ஏடிஎஸ் கொசுக்கள். உடல் நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த கொசுக்கள் இருக்கும்.
வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், டயர்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் , மேல்நிலைத் தொட்டிகள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டு பல்கி பெருகுகின்றன.
எனவே, இப்படி கேட்பாரற்று கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.












Click it and Unblock the Notifications