சரத் கட்சியை உடைத்தது பாஜக... பொன். ராதா முன்னிலையில் பாஜகவில் இணைந்த 7 நிர்வாகிகள்
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் அவர் அதை எல்லாம் மறந்துவிட்டு சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். யாரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சரத்குமாருக்கு அவரது சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேர் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜ், தலைமை நிலைய செயலாளர் ஐஸ் கவுஸ் தியாகு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பிரசாத், மாநில மகளிர் அணியின் துணை செயலாளர் டாக்டர் ஜெமிலா, நிதி ஆலோசர் ராஜசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் சிம்மூன் கிரேஸ் ஆகிய 7 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் சேர்ந்தவர்களில் ஒருவரான கரு. நாகராஜ் சரத்குமாரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் ஜெமிலா உள்ளிட்ட சிலரை சமீபத்தில்தான் கட்சியை விட்டு நீக்கியிருந்தார் சரத்குமார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததாக இவர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் பாஜகவுக்குப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் மதிமுகவிலிருந்து பலர் திமுகவுக்குப் போய்க் கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் சமத்துவ மக்கள் கட்சி உடைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications