7 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை தடுக்க தவறியதால் ஆக்ஷன்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை தடுக்கத் தவறியதாக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்பட தனிப்பிரிவு போலீசார் 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் அடுத்தடுத்து 66 பேர் பலியாகினர். இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஜிப்மரில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த, 72 வயது ஆகும் கண்ணன் என்பவர் உயிரிழந்து உள்ளார். இதன் மூலம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தடுக்கத் தவறியதாக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்பட தனிப்பிரிவு போலீசார் 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications