தென்காசி கலெக்டரிடம் ரேடியோவை கண்டுபிடித்து தர சொன்ன 95 வயது பாட்டி! பாட்டு கேட்கணுமாம்! இப்ப ஹேப்பி
தென்காசி: ஐயா, என் ரேடியோவை காணவில்லை.. யாரோ ரேடியோ பெட்டியை தூக்கிட்டு போய்ட்டாங்க.. பாட்டு கேட்காமல் எனக்க தூக்கம் வரமாட்டேங்குது, எப்படியாவது போலீஸாரை கண்டுபிடித்து தர சொல்லுங்க" என்று பல மைல் தூரம் கடந்து தென்காசி மாவட்ட கலெக்டரிடம் 95 வயது மூதாட்டி ஆதிலட்சுமி புகார் தந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், ஆதிலட்சுமிக்கு புது ரேடியோ கிடைத்துள்ளது. எப்படி தெரியுமா?
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ளது சிந்தாமணி நகர்.. இங்கு வசித்து வருகிறார் மூதாட்டி ஆதிலட்சுமி. இவருக்கு இப்போது 95 வயதாகிறது.

இவருக்கென்று சொந்தபந்தங்கள் அருகில் இல்லை என தெரிகிறது.. வீட்டில் தனியாகவே வசித்து வருகிறார். இதனால் பொழுதை போக்குவதற்கு ரேடியோ ஒன்றை, ரூ.700 தந்து வாங்கியிருக்கிறார்..
இந்த ரேடியோதான் ஆதிலட்சுமிக்கு முழு பொழுதுபோக்கு.. தினமும் எஃப்.எம். வைத்து பாட்டுகளை கேட்டுக் கொண்டிருப்பாராம்..
காணாமல் போன ரேடியோ
இந்நிலையில், கடந்த வருடம், யாரோ ஒரு மர்மநபர், வீட்டிலிருந்த ஆதிலட்சுமியின் ரேடியோவை திருடி சென்றுவிட்டார்களாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிலட்சுமி, ரேடியோவை காணாமல் தவித்தார்.. ஒரே துணையாக ரேடியோ மட்டுமே இருந்ததால், அவரால் பாட்டு கேட்காமலும் இருக்க முடியவில்லை..
எனவே இதுகுறித்து ஆதிலட்சுமி புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்து, தன்னுடைய ரேடியோவை கண்டுபிடித்து தரும்படி புகார் தந்துள்ளார்.. ஆனால், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் தரப்பில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
புளியங்குடி போலீஸ் ஸ்டேஷன்
இதனால் 2 நாட்களுக்கு முன்பு புளியங்குடி காவல் நிலையத்திற்கு மீண்டும் சென்றுள்ளார் ஆதிலட்சுமி.. தான் தந்த புகார் மீதான நடவடிக்கை குறித்தும் கேட்டதற்கு, அங்கிருந்தவர்கள், கிழவி என்று சொன்னார்களாம்.. இதனால் ஆத்திரத்துடன் போலீஸாரிடம் தகராறு செய்து விட்டு, ஆதிலட்சுமி அங்கிருந்து கோபத்துடன் வெளியேறி சென்றதாகவும் தெரிகிறது.
காணாமல் போன ரேடியோ இன்னமும் கிடைக்காமல் மனம் நொந்து போன ஆதிலட்சுமி, கலெக்டரிடம் இதை பற்றி முறையிடலாம் என்று முடிவு செய்தார்..
இதற்காக கடந்த திங்கட்கிழமை தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற ஆதிலட்சுமி, கலெக்டரிடம் மனுக்கொடுத்தார். அதில் "திருடு போன ரேடியோவை கண்டுபிடித்து தரவேண்டும். எனக்கு ரேடியோவில் பாட்டு கேட்காமல் ஏதோ இழந்தது போல உள்ளது. என்னால் பொழுதை போக்க முடியவில்லை" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
எப்எம் ரேடியோவால் பாட்டி மகிழ்ச்சி
95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி தனது ரேடியோ பெட்டியைக் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, போலீஸ்காரரிடம் சொல்லி எப்படியாவது என் ரேடியோவை கண்டுபிடிச்சு தந்துருங்க என்று கலெக்டரிடம் கேட்டுள்ளேன்.. அதுக்குதான் மனு தருவதற்கு இவ்ளோ தூரம் வந்திருக்கேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், எப்.எம். சார்பில் ஆதிலட்சுமிக்கு நேற்று புதிய ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.. அதை பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார். எப்போதுமே எஃப் எம்மில் பாட்டு கேட்பதாகவும், பாட்டு கேட்காமல் என்னமோ போல உள்ளதாகவும் ஆதிலட்சுமி கூறியிருந்த நிலையில், எஃப் எம்மிலிருந்தே ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications