இன்னிக்கி ஒரு புடி.. சுட சுட 1001 கிலோ பன்னி கறி.. ராமநாதபுரத்தை அதிர வைத்த விருந்து
ராமநாதபுரம்: இன்னிக்கி ஒரு புடி தான்.. என்பது போல் 1001 கிலோ பன்னி கறியை விருந்தாக வைத்திருக்கிறது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். சுடலைமாடன் சுவாமிக்கு படையல் வைத்த அந்த கிராமத்து விருந்து வீடியோ வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கிராமத்து படையல் விருந்துகள் பொதுவாக ஏகப்பிரபலம். மதுரை பக்கம் அதிகமாக நடக்கும். திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கனூணி, டி கல்லுப்பட்டி, சோழவந்தான் என மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் கிடா வெட்டி பொங்கல் வைப்பது சாதாரணமாக இருக்காது. மிகபிரம்மாண்டமாக இருக்கும்.

ஒரு ஊரோ அல்லது ஏராளமான கிராமங்களோ ஒன்று சேர்ந்து ஏராளமான ஆடுகளை வெட்டி படையலிட்டு விருந்து வைத்து சாமி படைக்கு படைத்து உண்பார்கள். இந்த விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். அன்று ஒரு நாள் யார் வீட்டிலும் உலை பொங்காது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெட்டுக்காடு கிராமத்தில் கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலைமாடன் சாமிக்கு 1001 கிலோ பன்றி கறி விருந்து படைக்கப்பட்டது. இந்த விழா குறித்து வீடியோ வெளியாகி பெரிய அளவில் பேசப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெட்டுக்காடு கிராமத்தில் அருள்மிகு முத்துப்பேச்சியம்மன், சுடலைமாடன் சாமி, காட்டேரு பெருமாள் சாமி கொடை விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு படையல் படைக்கப்பட்டது. அப்போது சுவாமிகளுக்கு தீர்த்தக் கொடை கும்ப நீர், பால், தயிர், சந்தனம், இளநீர், தண்ணீர், விபூதி , பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை மூலிகை திரவங்களில் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
அதன்பிறகு 1001 கிலோ பன்றி இறைச்சியை சமைத்து படையலிட்டு பூஜையும் செய்தனர் அந்த கிராமத்தினர். இதையடுத்து சுடச்சுட கமகமக்கும் வகையில் அசைவ விருந்து பக்தர்களுக்கு கிராம மக்கள் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. கிராமத்திற்கு வந்த அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விழாவையும் விருந்தையும் பார்த்து அந்த பகுதி மக்கள் வியந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications