கொரோனா தொற்றால் மனைவி பலி.. வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (வயது 57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இதற்காக அவர் தனது மனைவி மீனா (45) மற்றும் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

மனைவி மரணம்
இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மீனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா இறந்தார். இதைதொடர்ந்து அங்கேயே கொரோனா விதிமுறைப்படி மீனாவுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது.

மனவேதனை
இந்நிலையில் மீனாவின் அஸ்தியை தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்தில் கரைக்க கனகராஜன் முடிவு செய்தார். அதன்படி தனது மகன் மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது. இதற்கிடையே மீனாவின் மறைவால் கனகராஜன் கடந்த 1 மாதமாகவே மிகுந்த மனவேதனையில் காணப்பட்டார்.

கணவன், மகன் பலி
யாரிடனும் சரிவர பேசாமல் விரக்தியில் இருந்தார். இதேப்போல் மனோஜ்குமாரும் தாயின் பிரிவால் துயரத்தில் இருந்தார்.
நேற்று இரவு நரங்கிப்பட்டியில் கனகராஜன், மனோஜ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வழக்கு பதிவு
இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜன், மனோஜ்குமார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொரோனாவுக்கு பெண் இறந்த சோகத்தில் கணவன், மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications