இருக்கு.. இன்னும் இருக்கு.. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:2 நாட்களில் தீவிரமடையும்!
அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தை சூறையாடியது. அந்தப்புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் நேற்றிரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தெற்கு அந்தமான் அருகே புதிய வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக அவர் கூறினர்.

இரண்டு நாட்களில் வலுப்பெறும்
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அவர் கூறினார். மேலும் காற்றழுத்தமானது டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இடியுடன் கூடிய மழை
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தை நெருங்கும் பட்சத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்கள் மீண்டும் ஒரு கனமழையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சராசரி அளவை தொடவில்லை
வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால் இடைவெளி விட்டு விட்டு பெய்வதால் இதுவரை சராசரி அளவைக் கூட தொடவில்லை.

காற்றழுத்தததால் மகிழ்ச்சி
இந்நிலையில் அந்தமான் அருகே மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலம் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications