கட்டிடத்தில் ஏறி சட்ட கல்லூரி மாணவர் தற்கொலை மிரட்டல்... மதுரை தமுக்கம் மைதானத்தில் பரபரப்பு
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் திடீரென கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவர் அருகில் இருந்த தந்தி அலுவலக கட்டடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரை-தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒரு திடீரென அருகில் இருந்த தந்தி அலுவலக கட்டடத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவரிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த மாணவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார். தற்கொலைக்கு முயன்ற மாணவர் மதுரை சட்டக்கல்லூரி மாணவர் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications