”தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க”- ஆர்.டி.ஓவை மிரட்டிய அரசு பஸ் டிரைவர்!
நெல்லை: நெல்லை மாவட்டம் கயத்தாறில் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பெண் போக்குவரத்து அதிகாரியை மிரட்டிய காட்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை, மதுரை நான்குவழிச்சாலையில் கயத்தாறு அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் கயத்தாறு ஊருக்குள் செல்லாமல் பை பாஸ் வழியாக செல்கின்றன. இதனால் கயத்தாறுக்கு செல்லும் பயணிகள் பை பாஸ் டோல்கேட்டில் இறங்கி சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
அரசு பேருந்துகள் அனைத்தும் கயத்தாறுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி அரசு பஸ்கள் கயத்தாறுக்குள் செல்ல போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதன் பின்னரும் அரசு பேருந்துகள் பல கயத்தாறை புறக்கணித்து பை பாஸ் வழியாக செல்கின்றன. இதை கண்டித்து கடந்த 26 ஆம் தேதி கயத்தாறில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கயத்தாறுக்குள் செல்லாமல் பை பாஸ் வழியாக சென்ற அரசு பேருந்தை வழிமறித்து விசாரணை நடத்திய வட்டார போக்குவரத்து பெண் அதிகாரியை பஸ் டிரைவர் மிரட்டும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காட்சியில் ஆர்.டி.ஓ மெர்சி நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சை வழிமறித்து அதன் டிரைவரிடம் கயத்தாறு ஊருக்குள் ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த டிரைவர் போக்குவரத்து அமைச்சரிடம் கூறி அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி விடுவேன். பஸ் பயணிகளை நடு ரோட்டில் அமர வைத்து போராட்டம் நடத்துவேன் என மிரட்டல் விடுக்கிறார். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்த காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதை தொடர்ந்து இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications