ஆறுமுகநேரி தாரங்கதாரா ரசாயன ஆலையில் விபத்து: ஒப்பந்த தொழிலாளர் பலி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் கண்ணன் என்ற ஒப்பந்த தொழிலாளர் பலியானார்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் தாரங்கதாரா ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் ஆத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் கண்ணன் என்பவர் பலியானார்.

ஆலை நிர்வாகமோ இது குறித்து கண்ணனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் வடக்காத்தூர் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாரங்கதாரா ரசாயன ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் ஆலைக்கு எதிராக மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications