சத்தியமூர்த்தி பவனில் கார்த்திக்... ஆதரவைப் "புதுப்பிக்க" வந்தாராம்.. இணைப்பு அப்புறம்தானாம்!
சென்னை: நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். இதையடுத்து அவர் தனது கட்சியோடு காங்கிரஸில் இணைந்து விட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இணைப்பு குறித்து பின்னர் பார்க்கலாம் என்று சந்திப்பு முடிந்து வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் ஒரு வரி கூறி விட்டு கார்த்திக் போய் விட்டதால் அவர் இணைந்தாரா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்தார் நடிகர் கார்த்திக். இந்நிலையில், கார்த்திக் இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளக்கோவன் அவரை வரவேற்று பொன்னாடையும் போர்த்தினார்.

வாசனின் வெளியேற்றம்...
சில நாட்களுக்கு முன்புதான் ஜி.கே.வாசன் தரப்பு காங்கிரஸை விட்டு வெளியேறியது. அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே கார்த்திக் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்ததால் காங்கிரஸார் சுறுசுறுப்பாகினர். ஏற்கனவே இவர் காங்கிரஸில் சேருவது தொடர்பாக லோக்சபா தேர்தல் சமயத்திலேயே பேசி வந்தார். அப்போது அதை ஞானதேசிகன்தான் தடுத்து விட்டதாக ஒரு பேச்சு இருந்தது

சத்தியமூர்த்தி பவனில்
இந்த நிலையில் வாசன் தரப்பு முற்றிலும் வெளியேறியுள்ள நிலையில் சோர்ந்து போயுள்ள காங்கிரஸுக்கு இதம் தருவதாக கார்த்திக்கின் வருகை அமைந்தது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி...
ஆரம்பத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் செயல்பட்டு வந்தார் கார்த்திக். ஆனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படவே அவர் அதிலிருந்து விலகினார். கார்த்திக் சரியான தலைவராகவே செயல்படவில்லை என்று கட்சியினர் குற்றம் சாட்டியதால் அவர் வெளியேறினார். பின்னர்தான் நாடாளும் மக்கள் கட்சியை அவர் ஏற்படுத்தினார்.

திவாலான கட்சி...
இந்தக் கட்சியையும் கூட பார்ட் டைம் கட்சி போலவே அவர் நடத்தி வந்தார். தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டுப் பார்த்தது. ஆனால் பிரசாரம் கூட கார்த்திக் சரியாக செய்யவில்லை. கட்சி திவாலானது.

சொத்துப் பிரச்சினை...
தற்போது தனது குடும்பத்தில் சொத்துப் பிரச்சினையில் சிக்கியுள்ளார் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications