மக்களே நல்லா கேளுங்க.. உங்கள் நலனை காக்க நடிகர் கார்த்திக் எடுக்கும் அதிரடி முடிவு இதுதான்
Recommended Video

மதுரை: இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மதுரையில் புதிய கொள்கைகளோடு, புதிய பெயருடன் அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
திரை உலகில் சீனியர் நடிகரான மறைந்த முத்துராமனின் மகன் கார்த்திக். 1990களில் அசைக்க முடியாத காதல் நாயகனாக திரையுலகை கலக்கியவர் கார்த்திக்.
முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, அந்த சமுதாயத்தில் ஒரளவு செல்வாக்கு உள்ளது. இதை குறிவைத்துதான், 7 ஆண்டுகளுக்கு முன் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார்.

கார்த்திக்கின் அரசியல் பயணங்கள்
கார்த்திக்கிற்கு இருந்த ஆதரவை அடிப்படையாக வைத்து அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் கட்சியில் சரியாக பணியாற்றாமல் அடிக்கடி எஸ்கேப்பாகிவிட்டார். இதையடுத்து பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, 2009ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திக், சுமார் 15000 வாக்குகள் பெற்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்திலும் டெபாசிட்டை இழந்தது.

திடீர் பிரஸ் மீட்
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் நேற்று இரவு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: 2016 ம் ஆண்டுக்குப் பிறகு சில, பல நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன். தற்போது மக்கள் நலன் காக்கும் பொருட்டு, எனது அரசியல் கட்சிக்கு புதிய பெயரை சூட்டி, புதிய உத்வேகத்தோடு ஆரம்பிக்க உள்ளேன்.

இனி கருத்து சொல்வேன்
மதுரையில் இரண்டு மூன்று நாட்களில் கட்சி ஆரம்பிக்க இருக்கிறேன். ஜாம்பவான்கள் ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் அரசியலில் இருந்த போது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் இனி அரசியலில் எனக்கு இருக்காது.

இனி பாருங்கள்
இது அரசியலில் ஈடுபட சரியான தருணமாக கருதுகிறேன். புதிய பெயரில் கட்சி, புதிய நிர்வாகிகளோடு மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலையும் மக்கள் நலன் கருதி கண்காணித்து, புதிய உத்வேகத்தோடு செயல்பட இருக்கிறேன். இனி எனது அரசியல் பிரவேசம் ஆரம்பம். இரண்டரை வருடங்களுக்குப் பின்பு, பத்திரிக்கையாளர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்துப் பொறுத்திருந்து சொல்கிறேன். இவ்வாறு மதுரை விமான நிலையத்தில் நடிகர் கார்த்திக் பேட்டியளித்தார்.












Click it and Unblock the Notifications