ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி வரும் 12-ல் சந்திப்பு- அரசியலில் குதிக்கிறாரா?
சென்னையில் வரும் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துவதால் அவர் அரசியிலில் ஈடுபட முடிவு செய்துள்ளாரா என்ற எதிர்ப்பார்ப்பில் ஒட்டுமொத்த
சென்னை: சென்னையில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதால் அவர் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரஜினிகாந்த் முன்பெல்லாம் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் படம் குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். இன்னும் சொல்லபோனால் தேர்தல்களின்போது தமது ரசிகர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் அவ்வப்போது சந்தித்து வந்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்புகளுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால் இந்த சந்திப்புகளை நிறுத்திக் கொண்ட ரஜினி 10 ஆண்டுகளாக எந்த ரசிகர்களையும் சந்திக்கவில்லை.

வணக்கம் தெரிவிப்பார்
அவரது பிறந்தநாள், பொங்கல், புத்தாண்டு ஆகிய நாள்களின்போது சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தின் வீட்டின் முன் குவியும் ரசிகர்களை அவ்வப்போது வீட்டுக்கு வெளியே வந்து கையசைத்து தனக்கே உரிய பாணியில் வணக்கம் தெரிவித்து விட்டு சென்றார்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்தின் திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதால் அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கடந்த வாரம் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இது புரளி என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவித்தன.

போயஸ் கார்டனில் ரசிகர்கள்
இருந்தாலும் ரஜினி நம்மை சந்திப்பார் என்ற நம்பிக்கையில் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி ரசிகர்கள் இன்று திரண்டனர். பின்னர் வதந்தி என்பது உண்மை என்று நம்பிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வரும் ஏப்ரல் 12-ஆம் தேதியிலிருந்து 17-ஆம் தேதி வரை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்டம் வாரியாக ஒரு நாளைக்கு 300 ரசிகர்களை ரஜினி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

பாஜக முயற்சி
இந்நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பாஜக தடம்பதிக்க கடுமையாக போராடியும் முடியவில்லை. தமிழகம் என்றாலே திராவிடக் கட்சிகள்தான் என்றிருந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுவிட்டது. கருணாநிதியோ உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது.

கங்கை அமரன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது இது டிரைலர்தான், இனிமே தான் மெயின் பிக்சரை பார்க்கபோகிறீர்கல் என்று தெரிவித்தார். எனினும் நடிகர் ரஜினி காந்த் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தார்.

இலங்கை பயணம் ரத்து
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்ட விழாவில் கலந்து கொள்ள இருந்த ரஜினிகாந்தை கலந்து கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்ததால் தனது பயணத்தை அரைமனதாகவே ரஜினிகாந்த் ரத்து செய்தார். பின்னர் தமக்காக போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுக்கு நன்றியும் தெரிவித்தார் ரஜினி.

முக்கியத்துவம் வாய்ந்தது
இந்த சூழ்நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரசிகர் மன்றத்தின் எதிர்கால திட்டங்களை கேட்டறிவதற்கான சந்திப்பாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் இந்த ஆலோசனை கூட்டம் அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகும்.












Click it and Unblock the Notifications