சாலையோர அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்ட விஜய்.. கை கூப்பி மரியாதை செலுத்த முடியாதா? வெடித்த சர்ச்சை!
சென்னை: அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள சாலையோர திரு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மரியாதை செலுத்தினார். ஆனால் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு 'சடங்குக்கு' மலர் தூவி மாலை அணிவித்த விஜய், கை கூப்பி வணங்கி மரியாதை கூட செலுத்தாமல் சென்றது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. நடிகர் விஜய்யின் பனையூர் அலுவலகத்தில்தான் அனைத்து தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்வுகள் நடைபெறும்; அங்கு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு விஜய் தட்டில் பூக்களை ஏந்திய படி சென்று அவரே மாலை அணிவித்து வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய்- அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதவ்லர் நாற்காலியில் அமர்ந்து தமிழ்நாட்டையே தலைகீழாக புரட்டிப் போட போவதாக நம்பிக்கையில் வலம் வரும் நடிகர் விஜய், பனையூர் பங்களாவை விட்டு வெளியே வரமாட்டாரா? என்கிற கிண்டல்கள் இன்றும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தபடிதான் இருக்கின்றன.
இந்த நிலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தமது பங்குக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தனி ஒருவராக சென்று முதலில் மலர்களை தூவினார்; பின்னர் மாலை அணிவித்தார். அவ்வளவுதான் அவரது மரியாதை செலுத்தும் நிகழ்வு முடிவடைந்தது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடிவிங் எக்ஸ் பக்கத்தில், "சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்." எனவும் பதிவிட்டு விஜய் மாலை அணிவிக்கும் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோ, படங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார். ஒரு தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் விஜய், மரியாதைக்காகவாவது கை கூப்பி வணங்க தெரியாதா? என்ன பழக்கம் இது என கேள்வி எழுப்புகின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஆட்சியை பிடித்து முதல்வராகப் போவதாக நம்புகிற விஜய், ஏதோ போகிற வழியில் ஒரு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது சரியா? அல்லது தமிழ்நாடு அரசால் அம்பேத்கருக்கு புகழ் சேர்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அனைத்து தரப்பும் வந்து மரியாதை செலுத்துகிற அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது சரியா? என்கிற கேள்விகளும் விஜய்க்கு முன் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications