"5 நிமிடம்" திடீரென இரவில் மின்தடை.. ஏடிஜிபி ஜெயராமனிடம் விடிய விடிய நடந்த விசாரணை.. பரபரப்பு!
திருத்தணி: சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பாக காவல்துறை ஆயுதப் படை ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட ஜெயராமனிடம், டிஎஸ்பி தமிழரசி விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், 3 மாவட்ட எஸ்பி-க்களுடன் ஆலோசனை நடத்திய போது, திடீரென மின்தடை ஏற்பட்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் காதலனை தேடி விஜயஸ்ரீ வந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

சிறுவன் கடத்தல்
இதன் காரணமாக பெண் வீட்டார் இருவரையும் தேடி வந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராமன் அலுவல் பணிக்காக பயன்படுத்தும் வாகனத்தை எடுத்து கொண்டு காதலனான தனுஷ் வீட்டிற்கு ஒரு கும்பல் சென்றுள்ளது. காதல் ஜோடி எங்கிருக்கிறார்கள் என்று அந்த கும்பல் கேட்ட போது, குடும்பத்தினர் தெரியாது என்று கூறி இருக்கின்றனர். இதனால் மர்மக் கும்பல் உடனடியாக தனுஷின் சகோதரனை கடத்தி சென்றுள்ளது.
பூவை ஜெகன்மூர்த்தி
இதன்பின் கடத்தப்பட்ட சிறுவனை ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி இருக்கிறது. இதுதொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த சென்ற போது, போலீசாரை அவரது வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவரது ஆதரவாளர்கள் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஜெயராமனுக்கு சலுகை கிடையாது
இந்த விசாரணையின் போது, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியை லெஃப்ட், ரைட் வாங்கிய நீதிமன்றம், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமனையும் கைது செய்ய உத்தரவிட்டது. ஏடிஜிபி ஜெயராமன் கைதுக்கு அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசு ஊழியருக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது.
ஜெயராமன் கைது
தவறு செய்வோருக்கு இந்த விவகாரம் ஒரு செய்தியை சொல்லட்டும் என்று நீதிபதி கூறினார். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமன் சீருடையில் இருந்த நிலையில், உடனடியாக மாற்ற கோரப்பட்டு கைது செய்யப்பட்டு டிஎஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மின்சாரம் தடை
இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திடீரென மின் தடை ஏற்பட்ட நிலையில், 5 நிமிடங்கள் மின்சாரம் சரி செய்யப்பட்டு மீண்டும் வந்தது.
சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை
இதனைத் தொடர்ந்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராமனிடம் டிஎஸ்பி தமிழரசி விடிய விடிய விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணையின் முடிவில் ஏடிஎஸ்பி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய காவல்துறை தரப்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications