அம்மாவே தெய்வம்... ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டும் அதிமுக தொண்டர்
சென்னை: அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா நடத்தி வருகிறார் ஒரு பக்தர். இதே போல அதிமுக தொண்டர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடிகர், நடிகைகளையும், அரசியல் தலைவர்களையும் கடவுளாக நினைத்து கொண்டாடுகின்றனர். கட் அவுட்டிற்கு , பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் ரசிகர்கள். நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி வியக்க வைத்தனர்.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்துக்கடவுள்களின் வேடங்களில் சித்தரித்து பேனர் வைத்தனர். இது அப்பகுதி மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தவே சில மணிநேரங்களில் பேனர் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்போவதாக போஸ்டர் ஒட்டியுள்ளார் விருகை எம்ஜிஆர் இளைஞரணி பகுதி இணை செயலாளர் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாசன்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அதிமுக தொண்டர்களின் இதயதெய்வத்திற்கு திருக்கோயில் 'அம்மா ஆலயம்' அடிக்கல் நாட்டு விழா, அனைவரும் வாரீர் அம்மா ஆசி பெறுவீர். நாள்: 28-02-2016, இடம்: அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஆச்சரியத்துடன் பலரும் பார்த்து செல்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து கொண்டாடுகின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதாவின் காலில் விழுவதும், ஜெயலலிதாவிற்காக காவடி எடுப்பதும், மண் சோறு சாப்பிடுவதுமாக செய்யும் செயல்கள் ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பலரது கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
இதற்கிடையே தற்போது கோவில் கட்டப்போவதாக அறிவித்துள்ளார் வழக்கறிஞர் சீனிவாசன்.
கோவில் கட்டுவது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், கோயில் கட்டுற விஷயத்தைக் கேள்விப்பட்டதும், என்னோட சொந்தக்காரங்க பல பேர் பாராட்டினாங்க. வித்தியாசமான முயற்சி. இது அம்மாவோட தொண்டர்களுக்குப் புது உற்சாகத்தைக் கொடுக்கும்னு சொன்னாங்க.
கட்சிக்காரங்க இதுவரை யாரும் பாராட்டவும் இல்லை. எதிர்வினை செய்யவும் இல்லை. மத்தவங்களுக்கு எப்படியோ, எனக்கு அம்மா என்னைக்குமே தெய்வம்தான்! அந்தத் தெய்வத்துக்குக் கோயில் கட்டுறதுல ஒரு குற்றமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இது முதல்வர் காதுக்கு போனால் கோவில் கட்ட அனுமதிப்பாரா?












Click it and Unblock the Notifications