அமைதி காக்கும் ஜெயலலிதா... "முட்டாள்தனத்தால்" மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கும் அதிமுக!
சென்னை: எந்த அளவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமைதி காக்கிறாரோ அதை விட பல மடங்கு முட்டாள்தனத்தாலும், தொடர் போராட்டங்களாலும் மக்களிடம் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை சம்பாதித்து வருகிறார்கள் அதிமுகவினர்.
ஜெயலலிதாவிடம் விசுவாசமாக யார் இருப்பது என்பதில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலும் பயன் ஏற்படாது என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.
மாறாக நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் கடுமையாக விமர்சித்தும், வர்ணித்தும் அவதூறாக, அசிங்கமாக பேனர்களையும், போஸ்டர்களையும் போட்டு மக்கள் மத்தியில் ஜெயலலிதா மீது ஏற்பட்ட கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் காலி செய்து கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்.
இதைத் தட்டிக் கேட்க வேண்டிய, தட்டி வைக்க வேண்டிய கட்சித் தலைமையும் சரி, ஆட்சியும் சரி அமைதி காப்பதால் ஜெயலலிதா மீது ஏற்பட்ட அனுதாபம் குறைந்து தற்போது அதிமுக மீது கடும் அதிருப்தி மக்களிடையே அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

போலி விசுவாசிகளின் அட்டகாசம்
உண்மையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு என்று கூறி அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களைப் பார்த்தால் எல்லோருமே "சீன்" போடுவது போலவே தெரிகிறது. யாரிடமும் உண்மையான அக்கறை, அதிர்ச்சி, அனுதாபம் இருப்பது போலவே தெரியவில்லை.

கணக்கு காட்ட
தாங்களும் போராட்டம் நடத்தினோம் அம்மா, நாங்களும் கண்ணீர் விட்டு அழுதோம் அம்மா, நாங்களும் உண்ணாவிரதம் இருந்தோம் அம்மா.. என்று நாளை ஜெயலலிதாவிடம் கணக்கு காட்டிக் கொள்வதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் போலவே பல போராட்டங்கள் தோன்றுகின்றன.

சிரித்த முகத்துடன்
பல மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களைப் பார்க்கும் அதில் பலரும் சிரித்த முகத்துடன் ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் போலவே காணப்படுகின்றனர். சட்டை மட்டும்தான் கருப்பாக இருக்கிறது.. முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுவதை பார்க்க முடிகிறது. கடமைக்காக செய்வது போலவே பல போராட்டங்கள் இருக்கின்றன.

முதல் நாள்
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் உண்மையிலேயே அதிமுகவினர் மட்டுமல்ல அத்தனை தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வந்த திமுகவே கூட இதை எதிர்பார்க்கவில்லை. மக்கள் மத்தியிலும் கூட ஜெயலலிதா மீது பெரிய அளவில் அனுதாபம் பிறந்தது.

காலி செய்த வன்முறை
ஆனால் அன்று பிற்பகலுக்கு மேல் அதிமுகவினர் நிகழ்த்திய வன்முறை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

தொடர் போராட்டங்கள்
தற்போது ஏதோ முறை வைத்து நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது போல ஒவ்வொரு நாளும் ஒரு வகையான போராட்டம் நடந்து வருவது மக்களிடையே அதிமுகவுக்கு ஆதரவை பெருக்குவதை விட கோபத்தையே கூட்டி வருகிறது.

கேபிள் டிவி- பஸ் ஸ்டிரைக்
முதலில் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அடுத்து தனியார் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர், அதிருப்தியடைந்தனர். கிராமங்களுக்குச் செல்ல பஸ் கிடைக்காமல் மக்கள் நேற்று பெரும் துயரத்துக்குள்ளானார்கள்.

நாளை ஆம்னி பஸ் ஓடாதாம்
இந்த நிலையில் நாளை ஆம்னி பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர். இதுவும் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அதாவது பகல் நேரத்தில் நாளை ஆம்னி பஸ்கள் ஓடாதாம். ஏன் இரவில் ஸ்டிரைக் செய்யலாமே.. வசூல் போய்விடுமே என்ற அச்சத்தில் பகலில் மட்டும் ஒப்புக்கு இந்த ஸ்டிரைக் நடக்கிறது போலும்.

தனியார் பள்ளி கல்லூரிகள் மூடல்
அதேபோல நாளை தனியார் பள்ளி, கல்லூரிகளை மூடப் போகிறார்கள். காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில் திடீரென இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பானது ஜெயலலிதா ஆதரவு அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்த இடமெல்லாம் உண்ணாவிரதம்
அதேபோல சென்னையில் வள்ளுவர் கோட்டம், அதை விட்டால் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு என இரண்டு இடங்களில் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர். சமாதி, மெரீனா கடற்கரை காந்தி சில என நினைத்த இடத்தில் எல்லாம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். போலீஸும் இதை கண்டு கொள்வதில்லை.

இது மட்டுமா....
இது மட்டுமா.. நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவையும், சுப்பிரமணியம் சாமியையும், திமுக தலைவர் கருணாநிதியையும் அசிங்கமாக வர்ணித்து, விமர்சித்து பேனர் கட்டுகிறார்கள், போஸ்டர் அடிக்கிறார்கள்.. மக்கள் இதைப் பார்த்து இவ்வளவு முட்டாள்களா அதிமுகவினர் என்று முகம் சுளிக்கும் நிலைக்கு கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்.

கேலி கிண்டல்களில் இறங்கிய மக்கள்..!
அதிமுகவினரின் செயல்களைப் பார்த்து தற்போத சமூக வலைதளங்களில் அவர்களைக் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். தெய்வத்துக்கு சிறையா என்று கேட்டு அதிமுகவினர் வைத்த பேனர்களுக்குப் போட்டியாக தெய்வம் ஜாமீன் கேட்கலாமா என்று பேஸ்புக்கில் வாருகிறார்கள்.

எல்லாமே பாதகம்தான்!
ஜெயலலிதா சிறையில் அமைதியாக இருக்கிறார். சலுகை கூட கேட்காமல் இருக்கிற வசதியை ஏற்றுக் கொண்டு அமைதி காத்து வருகிறார். பிரச்சினை எதையும் அவர் செய்யவில்லை. நெஞ்சு வலி என்று கூறி போய் மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது கட்சியினரோ ஜெயலலிதா மீது கடும் எரிச்சலும், கோபமும் வர வைக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக நடந்து வருவதுதான் எரிச்சலாக இருக்கிறது.

சின்ன சீன்.. மெகா சீன்...!
இது எதுவுமே ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாது என்று யாராவது அதிமுக மூத்தவர்கள்தான் அறிவுரை கூற வேண்டும்.. ஆனால் அவர்களே பதவி ஏற்பின்போது கண்ணீர் விட்டு மெகா சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. என்னத்த சொல்ல!












Click it and Unblock the Notifications