"சூப்பர் சிங்கர் பார்ட் 2": சென்னை மாநகராட்சி கூட்டத்தில் "பேமிலி சாங்" பாடிய அதிமுக கவுன்சிலர்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் கடைசிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் நாளை நமதே படத்தில் வரும் பாடலைப் பாட, அவருடன் சேர்ந்து மேயர் சைதை துரைசாமியும், மற்ற அதிமுக கவுன்சிலர்களும் பாட, கூட்டமே கலகலப்பானது.
ராஜ்யசபாவில் "காஷ்மீர் பூட்டிபுல் காஷ்மீர்" என்று "சூப்பர் சிங்கர்" நவநீதகிருஷ்ணன் பாட்டுப் பாடினாலும் பாடினார், அதிமுகவினர் அதை விடாமல் பிடித்துக்
கொண்டனர். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பாடித் தீர்த்து விடுகின்றனர்.
இப்படித்தான் சென்னை மாநகராட்சியின் கடைசி மாமன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் துரைசாமி உருக்கமாக பேசினார். இதனால் சபையே இறுக்கமாக காணப்பட்டது. ஆனால் கடைசியில் கவுன்சிலர் ஒருவர் பாட்டுப் பாடி கலகலப்பாக்கி விட்டார். இன்று நடந்த இக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி நீண்ட நேரம் பேசினார் சைதை துரைசாமி.

மிஞ்ச ஆளே இல்லை
துரைசாமி பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா மக்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். ஏழைகளின் புனர்ஜென்மமாக அவர் விளங்குகிறார். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் அவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. ஆண்டுக்கு 10 கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேல்படிப்புகளுக்கு மாணவர்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறார். உயர் கல்வியின் தரத்தை முதல்வர் உயர்த்தி வருகிறார்.

அழகு பார்த்தவர் "அம்மா"
1983 முதல் நான் கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதிமுகவில் பல்வேறு பதவிகளை, பொறுப்புகளை முதல்வர் அம்மா எனக்கு அளித்துள்ளார். அவர் மூலம் பல வாய்ப்புகள், வளர்ச்சிகள் எனக்கு கிடைத்துள்ளது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன். எனக்கு மேயர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா.

வெள்ளம் பாதித்தபோது
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கம், எழில்நகர் பகுதி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் முதல்-அமைச்சர். அங்கு உடனடியாக தொடக்க, நடு நிலைப்பள்ளிகள் தொடங்கவும் உத்தரவிட்டார். சேத்துப்பட்டு ஏரி திமுக ஆட்சியில் பாழ்பட்டு கிடந்தது. அதனை புதுப்பித்து படகு சவாரி செய்யும் மையம், மீன்பிடித்தல், நடைப்பயிற்சி செய்தல் போன்றவற்றை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

எழில் மிகு சென்னை
பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி பொது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையின் அடையாளமாக திகழும் கூவம் நதியை சீரமைத்து எழில் மிகு நகரமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் ஓடும் இந்த கூவம் நதியை சுத்தப்படுத்தி, செம்மைப்படுத்தி பொது மக்கள் கூடும் பொழுது போக்கு இடமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை அழகு மிகு நகரமாக மாற உள்ளது.

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் என்று இருந்தது. தாயுள்ளம் கொண்ட முதல்வர் அதனை 9 மாதமாக மாற்றியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், இடம் மாறிச் சென்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள், எங்களோடு உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் முடித்தார்.

பேமிலி சாங்!
அதன் பின்னர் கேள்வி நேரம் நடந்தது. அப்போது அதிமுக உறுப்பினர் ஜி.ஆர். சீனிவாசன் எழுந்து பேசும்போது திடீரென, நாளை நமதே படத்தில் வரும் நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி நாளை நமதே.. என்று பாட கூடவே சேர்ந்து சைதை துரைசாமியும் பாட கூட்டமே கலகலப்பானது. இது தமிழக மக்களின் மனம் கவர்ந்த "பேமிலி சாங்" என்பது நினைவிருக்கலாம்.

இன்னொரு பாட்டு ப்ளீஸ்!
சீனிவாசன் பாடி விட்டு அமர விடுவாரா வேளாங்கண்ணி.. (இவரும் அதிமுகதான்) அவர் எழுந்து. காலத்தை வென்றவர் நீ, மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா என டபுள் பாட்டுப் பாடி கலகலப்பை டபுள் மடங்காக்கினார். இப்படியாக கடைசி நாள் கூட்டம் கலகலப்பாக நடந்தேறியது.












Click it and Unblock the Notifications