நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டுக்கு பூட்டு போட்ட மர்மநபர்... சாத்தான்குளத்தில் பரபரப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் நள்ளிரவில் அதிமுக பிரமுகர் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம சாத்தான்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பாபுசுல்தான். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர். இவர் அதிமுக 10வது வார்டு செயலாளராக உள்ளார். நேற்றிரவு இவர் வழக்கம் போல் வீ்ட்டை உள் பக்கமாக பூட்டி விட்டு படுக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவரது உறவினர் மதுரோஸ் என்பவர் பாபு சுல்தானுக்கு போன் செய்து, ‘தனது வீ்ட்டை யாரோ வெளிபக்கமாக பூட்டி விட்டனர் என்றும் திறந்து விடுமாறும்' தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாபுசுல்தான் தனது வீட்டை திறந்து வெளியே வர முயன்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்கும் வெளிப்புறமாக பூட்டு போடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசுக்கு அவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த சாத்தான்குளம் எஸ்ஐ ராஜேந்திரன், இரண்டு வீடுகளின் பூட்டையும் உடைத்து அவர்களைத் திறந்து விட்டார்.
அதிமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர் வீ்ட்டுக்கு மர்ம நபர்கள் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாபுசுல்தான் சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வீடுகளுக்கு பூட்டு போட்ட மர்ம நபர் யார்? ஏன் அவ்வாறு செய்தார் என்பது குறித்து சாத்தான்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு வசிக்கும் மற்றவர்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications