வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு... தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை: வழக்கறிஞர்களுக்கு எதிரான சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் வழக்கறிஞர்கள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, குடிபோதையில் நீதிமன்றத்துக்கு வருவது, நீதிபதிகளின் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டும் விதமாக உரத்த குரலில் வாதம் செய்வது, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை, வழக்கறிஞர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராக தடைவிதிக்கவும் உயர் நீதிமன்றம் மற்றும் வட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை எதிர்த்து கடந்த ஜூன் முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த ஜூலை ஜூலை 25-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனிடையே வழக்கறிஞர்களின் புதிய சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, வழக்கறிஞர்கள் புதிய சட்டத்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஏராளமானோர் கலந்து சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். கன்னியாகுமரியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில், நாகர்கோவில், தக்கலை, பூதப்பாண்டி, குழித்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதேபோல, கிருஷ்ணகிரி அண்ணா சிலை முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அலுவலகம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் மேற் கொள்ள மாவட்ட முதன்மை நீதிபதி அனுமதி மறுத்ததால், வழக்கறிஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உண்ணாவிரதம் நடைபெற்றது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications