6 ஆண்டுகளுக்குப் பிறகு காங்.அலுவலகத்தில் ராகுல்... தலைவர்களுடன் தீவிர ஆலோசனை
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனுக்கு 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்றுள்ளார் ராகுல் காந்தி.
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி வருகை தந்துள்ளார். அங்கு மரக்கன்று நட்ட ராகுல் காமராஜர் சிலைக்கு மலர் தூவியும் கட்சி கொடியை ஏற்றியும் மரியாதை செய்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் மீது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு காங்கிரசின் புதிய தமிழக தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் உலா வந்தன.

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளும் சட்டமன்ற பேரவையில் அவர் நுழைந்ததின் வைரவிழாவும் நேற்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்க வரும் காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு செல்ல மாட்டார் என்றே கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதையெல்லாம் புறந்தள்ளியுள்ளது சத்திய மூர்த்தி பவனுக்கு ராகுல் காந்தி வருகை. இதன் மூலம் திருநாவுக்கரசருக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு பலமாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications