அன்று "எதிரிகளே இல்லை".... இன்று "சூழ்நிலைக்கேற்ப முடிவு": தனித்துப் போட்டியிட ஜெ. தயக்கம்?
சென்னை: அரசியல் களத்தில் அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று கர்ஜித்த அக்கட்சிப் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா, தற்போது தேர்தல் குறித்து 'சூழ்நிலைக்கேற்ப' முடிவெடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். இது சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவும் என்ற அச்சத்தின் வெளிப்பாடுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி... சென்னையில் அதிமுகவின் பொதுச்செயலராக மீண்டும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.. அப்போது பேசிய ஜெயலலிதா, "நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் இனி யாரும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையை நாம் படைத்திருக்கிறோம். இன்று அரசியல் களத்தில் எதிரிகளையே காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார்" என கர்ஜித்திருந்தார்.
ஆனால் அதே ஜெயலலிதா சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு- பொதுக் குழுக் கூட்டத்தில், "வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்து வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்திகளை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும்.

சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு..
தேர்தலை சந்திப்பதற்கு எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில் தான் 2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளோம். அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.

கூட்டணிக்கான தயவு
2014ஆம் ஆண்டைப் போல, "அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை...சட்டசபை தேர்தலிலும் நாங்களே வெல்வோம்' என ரத்தின சுருக்கமாக ஜெயலலிதாவால் தற்போது கர்ஜிக்க முடியவில்லை. மாறாக "சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பேன்" என ஜெயலலிதா தயங்கிச் சொல்வதே கூட்டணிக்கான' தயவை எதிர்பார்த்து இருப்பதையே வெளிப்படுத்துகிறது.

கூட்டணிகள் கள நிலவரம்
தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுடன் கை கோர்ப்பதற்கான பட்டியலில் எந்த ஒரு பிரதான அரசியல் கட்சியுமே இல்லை.. வழக்கம் போல இந்திய குடியரசுக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவைதான் அதிமுகவின் கூட்டணியில் உள்ளன. நாட்டாமை சரத்குமார் கூட அணி தாவுவதற்கு சாத்தியம் இருப்பதற்காக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையவிடாமல் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தனித்து நிற்கின்றன. அது அதிமுகவுக்குத்தான் சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான பா.ம.கவும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.

எங்கே போகும் தேமுதிக
இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியான (?) தேமுதிக எந்தப் பக்கம் போகப் போகிறது? என்பதை பொறுத்தே தேர்தல் களம் அமைய இருக்கிறது. தற்போது நிலவி வரும் தேமுதிக- அதிமுக மோதலில் தேமுதிக, திமுக அணியை நோக்கியே இயல்பாக தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கும் திமுகவை விட்டால் வேறு வழியே இல்லை.
ஆனால் இதில் குறுக்குசால் ஓட்டும் விதமாக பாஜக தலைவர்கள் தினந்தோறும் விஜயகாந்த்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் பாஜகவை நம்பி விஜயகாந்த் சட்டசபை தேர்தல் களத்தில் இறங்குவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. தேமுதிக-பாஜக கூட்டணி அமைந்தால் அது 3வது இடத்துக்கான போட்டியில் தான் இருக்குமே தவிர, எம்எல்ஏக்கள் கிடைக்க மாட்டார்கள்.

ஹிடன் அஜெண்டா
அதே நேரத்தில் தேமுதிகவுடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதன் பின்னணியில் ஒரு ''ஹிடன் அஜெண்டா'' இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுகவுடன் இப்போதே தேமுதிக போய்விடக் கூடாது; அப்படி போனால் திமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி உருவாகிவிடும். அதிமுகவுக்கு உதவும் வகையில் உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணியும் உடைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன... ஆகையால் இந்த மெகா கூட்டணி உருவாவதை எவ்வளவு தூரதம் தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தாமதப்படுத்துவது என்பதுதான் பாஜகவின் அன்றாட 'விஜகாய்ந்த் சந்திப்பு அஜெண்டா" என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்...

நடுத்தெருவில் வைகோ
ஏனெனில் தற்போது தேர்தல் களத்தை சந்திக்க அதிமுகவுக்கு ஒரு துணை தேவை தேவைப்படுகிறது; அந்த இடத்தைப் பிடிக்க பாஜக முயல்கிறது. ஆனால், இப்போதே அதிமுக- பாஜக கூட்டணி உருவானால், இதை மதவாதக் கூட்டணி என்று சொல்லிக் கொண்டு, மதவாதத்தை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்கிறோம் என்று சொல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை திமுக பக்கம் வரக் கூடும். அப்படிப்பட்ட சூழலில் வைகோவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டும் தனித்துவிடப்படவும் வாய்ப்புள்ளது.

அம்புட்டும் நாடகம்தான்
ஆகையால் தேர்தல் நெருங்கும் வரை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் ஒன்றுசேர முடியாத தொலைவுக்கு தள்ளிவிட்டு இறுதியாக அதிமுகவும் பாஜகவும் அதிரடியாக கூட்டணி சேருவது என்பதுதான் இரு கட்சிகளின் பிரதான அஜெண்டா எனவும் கூறப்படுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை தேமுதிகவுடன் சேர்ந்து போட்டியிடுவதால் 4வது இடம் கூட கிடைக்காது என்பதும், அதிமுகவுடன் சேர்ந்தால் குறைந்தது 5 எம்.எல்.ஏக்களாவது உறுதியாக கிடைப்பார்கள் என அக் கட்சி நம்புகிறது. இருப்பினும் இப்போதே எதிர்க்கட்சிகளை ஒன்று சேரவிட்டுவிட்டால் அதிமுக- பாஜகவுக்கு அது பெரும் பின்னடைவைத் தந்துவிடும் என்பதாலேயே, விஜய்காந்த் தனது கூட்டணிக்கு வர மாட்டார் என்று தெரிந்தும், நாள்தோறும் விஜயகாந்த் சந்திப்பு எனும் நாடகத்தை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

மரண பயணம்
இத்தனையும் அதிமுகவின் கண்ணசைவிலேயே நடைபெறுவதால்தான் "சூழ்நிலைக்கேற்ப முடிவு" என்ற யுக்தியை தொண்டர்களிடத்தில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. நாடாளுமன்றத் தேர்தலின் போது எங்களுக்கு எதிரிகளே இல்லை என்ற ஜெயலலிதா, இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் தடுப்பதற்கான வியூகங்களோடு வலம் வருகிறார், கடைசி நேரத்தில் பாஜகவுடன் அதிமுக கைகோர்க்கும்போது எதிர்க் கட்சிகள் திமுக, பாமக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக என்று பிளவுபட்டு தடுமாறிக் கொண்டிருக்கும்.
ஓராண்டுக்கு முன்னர் இல்லாத எதிரிகள் இப்போது விஸ்வரூபமாக நிற்கிறார்கள்; அவர்களை வீழ்த்தவே யுக்தி வகுத்து வருகிறேன் என்பதையே "சூழ்நிலைக்கேற்ப முடிவு" என சொல்லி வைக்கிறார் ஜெயலலிதா.... இது அதிமுகவின் அசுர நம்பிக்கையில் குறிப்பாக ஜெயலலிதாவின் அசைக்க முடியாத நம்பிக்கையில் விழுந்த மரண அடி என்பதில் மிகை ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications