மாதவிலக்கு நாட்களிலும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்: சென்னை ஹைகோர்ட்டில் மனு
சென்னை: மாதவிலக்கு நாட்களில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'கேரளா இந்து பொது வழிபாட்டு தலங்கள் (பிரவேச அனுமதி) சட்டம் 1965' மூலமாக, 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரவேசம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் மாதவிலக்கு காரணமாக 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது என்பது தடைக்கான முக்கிய காரணம்.

இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு மற்றும் 5 பெண் வக்கீல்கள் 2006ம் ஆண்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது அந்த விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
அரசியல் சாசனப்படி பெண்களை கோயிலுக்குள் செல்ல தடை செய்ய வழியில்லை என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மாதவிலக்கு உள்ள பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவில் கோவிலுக்குள் பெண்கள் செல்வதில் கடந்த 1947 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதுபோன்ற நடைமுறைகளால் பாலின வேறுபாடு ஏற்படுகிறது. மாதவிலக்கு நாட்களிலும் பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரணையை ஏப்ரல் 25க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications