"செல்வி" ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு படையெடுத்து வந்த வாரிசுகள்! #Jayalalitha #Jaya
ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வாரிசுகள் என சிலர் கிளம்பி வந்ததை இந்த ஓராண்டில் தமிழகம் கண்டது.
சென்னை: ஜெயலலிதா இறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஓராண்டில் பல பரபரப்புகளை தமிழகம் கண்டது. அதில் ஒன்று அவரது வாரிசுகள் என சிலர் கிளம்பி வந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல கோளாறுகளால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு, அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த ஓராண்டில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை பார்ப்போம்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக எடுத்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தீபக்கும் உரிமை கொண்டாடினர். தாங்கள் இருவரும் ஜெயலலிதாவின் வாரிசாக இருக்கும் போது போயஸ் தோட்ட இல்லத்தை அரசு எடுத்து கொள்ளக் கூடாது என்று வாதிட்டனர்.

பெங்களூர் பெண் அம்ருதா
ஜெயலலிதாவின் மகள் என கூறி உச்சநீதிமன்றத்தில் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், நான் பெங்களூரில் உள்ளேன். நான் ஷைலஜா- பார்த்தசாரதி தம்பதியிடம் வளர்ந்து வந்தேன். ஜெயலலிதாவின் அக்காள்தான் ஷைலஜா. எனது தாய் இறக்கும் தருவாயில் கடந்த மார்ச் மாதம் எனக்கு ஒரு உண்மையை கூறினார். அதில் நான் ஜெயலலிதாவின் மகள் என்றும் கடந்த 1980-இல் பிறந்த என்னை வளர்ப்பதற்காக தங்களிடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

உடலை தோண்டி...
நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை உறுதிப்படுத்த எனக்கும் அவருக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும். ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு அறிவுறுத்தியது.

ஜெயலலிதா சோபன்பாபு விவகாரம்
அம்ருதா விவகாரம் வெளியே வரத் தொடங்கியதும் ஜெயலலிதாவின் உறவினர் லலிதா கூறுகையில், ஜெயலலிதாவுக்கு 1980-களில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனது அத்தை ஜெயலட்சுமிதான் அவருக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு பிறந்த குழந்தையின் தகப்பன் சோபன்பாபுதான். பெண் குழந்தை பிறந்தது குறித்து எதையும் வெளியே சொல்லக் கூடாது என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் நான் இதுவரை சொல்லவில்லை. தற்போது அம்ருதா ஜெயலலிதா குறித்து கூறுவதால் எனக்கு தெரிந்த உண்மையை கூறுகிறேன் என்றார்.

ஜெயலலிதாவின் அப்பாவுக்கு இரு மனைவிகள்
ஜெயலலிதாவுக்கு இரு மகள்கள் உள்ளதாக அவரது அண்ணன் எனக் கூறி கொள்ளும் வாசுதேவன் தெரிவித்தார். தனது தந்தை ஜெயராமனின் இரண்டாவது மனைவிதான் சந்தியா என்றும் அவருக்கு பிறந்தவர்தான் ஜெயலலிதா என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இவர் ஒரு புதிய குண்டைவீசியுள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு இரு மகள்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிரோடு இல்லாத நிலையில் முகம் தெரியாத நபர்கள் எல்லாம் தங்கள் இஷ்டத்துக்கு பேசி வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மகன்
கடந்த மார்ச் மாதம் ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் ஜெயலலிதாவின் மகன் என்றும் தந்தை சோபன்பாபு என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது ஆவணங்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்பதால் நீதிபதி அவருக்கு கண்டனம் தெரிவித்து இதுபோல் மீண்டும் செய்தால் சிறைக்கு நேரடியாக அனுப்பிவிடுவதாக மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications