ரெய்டு விட்ட வாத்தி! தெறிக்க ஓடிய 90ஸ் கிட்ஸ்! திருவாரூர் அலறிடுச்சே.. மாஸ் காட்டிய 80 வயது முதியவர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வீடு புகுந்து திருட வந்த 4 பேரை 80 வயது முதியவர் ஒருவர் ஓட ஓட விரட்டியடித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து திருட வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவான் ஓடை பகுதியை சேர்ந்தவர் வைரக்கண்ணு. 80 வயதாகும் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவருக்கு வருமானம் என்று பெரியதாக எதுவும் இல்லை. தனது பிள்ளைகள் அனுப்பும் சொற்ப பணத்தை கொண்டு அன்றாட தேவைகளை இவர் பூர்த்தி செய்து வருகிறார். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் வைரக்கண்ணு எப்போதும் வீட்டை உள்பக்கம் பூட்டியே வைத்திருப்பார். இப்படியே அன்றாட வாழ்க்கை சென்றிருக்கிறது.
இந்நிலையில் நேற்றிரவு இவர் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 4 பேர் இவரது வீட்டை சுற்றி வளைத்திருக்கின்றனர். முதலில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது வைரக்கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் நேரம் போக போக, வீட்டிற்கு வெளியில் 4 பேரின் நடமாட்டம் தெரியவந்திருக்கிறது. உடனே உஷாரான முதியவர், தனது அரிவாளை தற்காப்புக்காக எடுத்து வைத்திருக்கிறார். எதிர்பார்த்தபடி வீட்டிற்குள் நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்திருக்கின்றனர். அப்போது முதியவர் வைரக்கண்ணு தன்னுடைய அரிவாள் கொண்டு அவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

அவ்வளவுதான் திருட வந்த இளைஞர்கள் அலற, தெரு மக்கள் ஒன்றுகூடிவிட்டனர். எனவே தப்பித்தால், பிழைத்தால் போதும் என திருட வந்தவர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர், முதியவரின் வீட்டை ஆய்வு செய்து திருட்டு முயற்சி நடந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேட தொடங்கினர். எதிர்பார்த்தபடி கையில் அரிவாள் வெட்டோடு சிகிச்சை பெற்று வந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவருடன் திருட்டில் ஈடுபட முயன்ற மற்றவர்கள் குறித்தும் விசாரித்தனர்.
விசாரணையின் அடிப்படையில் கிடைத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். இவர்கள் இதற்கு முன்னரும் இதேபோல பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல திருட்டு சம்பவத்தை தைரியத்தோடு தடுத்த 80 வயது முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications