இதோ... என் தகுதிப் பட்டியல்... வேறு என்ன வேண்டும்? ஸ்டாலினுக்கு அன்புமணி மீண்டும் கடிதம்!
சென்னை: தகுதி இல்லாதவர்களுடன் விவாதிக்கத் தயாராக இல்லை என்று கூறிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு தனது தகுதி பட்டியலுடன் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டை சீரழித்ததில் தி.மு.க.வுக்கு உள்ள பங்கு குறித்து நான் எழுதிய கடிதத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க. ஆற்றியதாகக் கூறப்படும் பணிகள் குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என்று தனது 2 வது கடிதத்தில் அன்புமணி சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் 3 வது கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது....

மூன்றாவது மடல்
விவாதம் நடத்தத் தயாரா? என்ற எனது இரண்டாவது கடிதத்திற்கும் இதுவரை தங்களிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால், சென்னையில் நேற்று நீங்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘‘ தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்க மாட்டேன். தேவையில்லாத கடிதங்களையெல்லாம் படிப்பதில்லை'' என்று கூறியிருக்கிறீர்கள்.
நான் நீங்கள் இல்லை
ஏற்கனவே கூறியதைப் போல நான் உங்களைப் போன்றவன் இல்லை. தகுதியிருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன். அந்த நாகரீகத்தால் தான் உங்களுக்கு மூன்றாவது முறையாக இப்போது கடிதம் எழுதுகிறேன். தகுதியுள்ளவர்களுடன் மட்டும் தான் விவாதம் நடத்துவேன் என்று நீங்கள் கூறியிருந்ததால் எனது தகுதிகள் என்னென்ன? என்பதை தங்களுக்கு தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இதோ எனது தகுதிகள்...
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது, 1000 ஏரி மற்றும் குளங்களை தூர்வாரியது, 50 தடுப்பணைகளை கட்டியது ஆகியவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் ஆற்றிய பணிகளில் சிலவாகும்.
ஐ.நா.அங்கீகாரம்
பசுமைத் தாயகம் அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகாரம் பெற்றுத் தந்தேன். பசுமைத் தாயகம் அமைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பினராக நியமிக்க வைத்தேன்.
பங்கேற்ற சர்வதேச நிகழ்ச்சிகள்:
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன். 2000 ஆவது ஆண்டில் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்றேன்.
புவி உச்சி மாநாடு
2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டேன். 2003 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாட்டில் பங்கேற்றேன். 2012 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் பங்கேற்றேன்.
லண்டனில் படித்தவன்
2003ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் படித்தேன். 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
மத்திய அமைச்சராக ....
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றினேன். மத்திய அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாநாடுகளுக்கு தலைமையேற்றும், பங்கேற்றும் உள்ளேன்.
108 திட்டத்தைத் தொடங்கியவன்
இந்தியாவில் முதன்முறையாக 108 அவசர ஊர்தித் திட்டத்தை தொடங்கினேன். புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் கொண்டு வந்தேன். அயோடின் சத்து சேர்க்கப்பட்ட உப்பை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
தேசிய சித்த மருத்துவ மையம்
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையத்தை அமைத்தேன். சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை அமைக்கும் திட்டத்தை உருவாக்கினேன். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி அமைப்பாக மாற்றினேன்.
ஐ.நா. கூட்டம்
2006 ஆம் ஆண்டு மே மாதம் 22 முதல் 27 வரை ஜெனீவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற ஐ.நா. அங்கீகாரம் பெற்ற உலக சுகாதார அவைக் கூட்டத்திற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கூட்டத்தை தலைமையேற்று வழி நடத்தினேன்.
வென்ற விருதுகள்
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது, உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது, உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருது, சென்னை ரோட்டரி சங்கத்தின் For the sake of Honourவிருது.
தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள்
சென்னையில் ரூ. 100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம். சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை. மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை. சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம். சென்னையில் ரூ.50 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை மண்டல புற்றுநோய் மையமாக அறிவித்தது. காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம். செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா. தமிழக நெடுஞ்சாலைகளில் மதுரை, தாம்பரம், வேலூர்,கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துக்காய சிகிச்சை மையங்களை அமைத்தேன்.
தருமபுரி தொகுதி எம்.பி
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றேன்.
வேற என்ன வேண்டும்
நீங்கள் என்னுடன் விவாதத்திற்கு வர வேண்டுமானால் எனக்கு வேறு என்ன தகுதி வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழக மக்கள் அறிந்து கொள்ள வசதியாக உங்களுடைய தகுதி என்ன? என்பதையும் தெரிவிக்க வேண்டும். 50 ஆண்டு கால தமிழக நிலவரம் குறித்து ஒரே மேடையில் நேருக்குநேர் விவாதம் நடத்த மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் அன்புமணி.












Click it and Unblock the Notifications