36 வருஷமா 'ஸ்லோ பாய்சன்'..புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள்! பரபர புகார் சொன்ன பாமக அன்புமணி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 36 ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் குரோமிய கழிவுகளை அகற்றாமல் திமுக அரசு இப்பகுதி மக்களை 'ஸ்லோ பாய்சன்' வைத்து கொலை செய்து வருகிறது எனவும், குரோமிய கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அங்கு செயல்பட்டு வந்த குரோமியம் தயாரிக்கும் நிறுவனத்தால் 36 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையி, அவர்களை நேரில் சந்தித்து, அவர்களது இன்னல்கள் குறித்து கேட்டு அறிந்தார்.

பின்னர் பேசிய அவர்," ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த குரோமியம் உற்பத்தி செய்யும் கம்பெனி 1989இல் இழுத்து மூடப்பட்டது. அதன் உள்ளே இருந்த லட்சக்கணக்கான டன் கழிவுகள் 36 ஆண்டுகளாக அப்படியே உள்ளது அவற்றை அகற்ற தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியும் கூட அதனை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த பகுதியில் அமைச்சராக இருக்கும் காந்தி இந்த கழிவுகளை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குரோமிய கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து புற்று நோயையும் பல்வேறு உடல் சார்ந்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. தற்போது நாம் குடிக்கின்ற நீரில் அனுமதிக்கப்பட்ட குரோமியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 0.05%. ஆனால் இந்த குரோமியம் தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கக்கூடிய சுற்றுவட்டார பகுதியில் 700 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய ஒரு லிட்டர் குடிநீரில் கலந்திருக்கும் குரோமியத்தின் அளவு 277 மில்லிகிராம் அளவுக்கு உள்ளது.
இவ்வளவு நச்சு கழிவுகள் உள்ள இந்த குடிநீரை குடித்தால் எப்படி மக்கள் உயிர் வாழ முடியும். காரணமாகத்தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகமான புற்றுநோய் நோயாளிகள் இருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோது ராணிப்பேட்டையில் இருந்து வேலூர் வரைக்கும் 5000 இளைஞர்களை வைத்து நாங்கள் சைக்கிள் பேரணியை மேற்கொண்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த குரோமியம் கழிவுகளை அகற்றக்கோரி எவ்வளவோ போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திவிட்டோம். ஏன் நீதிமன்றத்தில் வழக்கு கூட போட்டு விட்டோம் ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தொகுதியின் உடைய சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் காந்தி இந்த பகுதி மக்களை கொலை செய்கிறார். கொலை என்றால் நேரடி கொலை அல்ல ஸ்லோ பாய்சன் வைத்து படிப்படியாக கொலை செய்து வருகிறார்கள்.
அதாவது குரோமியம் கழிவுகள் காற்றின் மூலமாகவும் தண்ணீரின் மூலமாகவும் அன்றாடம் கலந்து மக்களின் உயிரை பறிக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆண்மை குறைவு கல்லீரல் பிரச்சனை மண்ணீரல் பிரச்சனை நுரையீரல் பிரச்சனை போன்ற பலவிதமான பிரச்சனைகள் இப்பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது. திமுக ஆட்சி செய்வதற்கான தகுதியை இழந்து விட்டது. தன் மக்களை கொலை செய்து கொண்டிருக்க கூடிய இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த குரோமியம் கழிவுகளை இங்கிருந்து அகற்ற 700 கோடி வரை செலவாகும் என்று சொல்கிறார்கள்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். பாலாற்றை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவுகள் பாலாற்றில் கலந்து வருகிறது. அதனை தடுப்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் எந்த விதமான பயனும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications