ரயில் விபத்தில் 10 பேர் பலியான சம்பவத்திற்கு யாரும் ராஜினாமா செய்தார்களா? கடுகடுத்த செல்வப்பெருந்தகை
கள்ளக்குறிச்சி: "ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 288 பேர் உயிரிழந்தனர். கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். யாரும் ராஜினாமா செய்யவில்லையே?" என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அடுத்தடுத்து பலர் பலியாகினர். அங்கு தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் கள்ளச்சாராய பலி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. சட்டசபையில் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுக்க எதிர்க்கட்சியான அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை, "ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 288 பேர் உயிரிழந்தனர். யாரும் ராஜினாமா செய்யவில்லையே என்று பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சிக்கே நேரடியாக நாங்கள் போகிறோம். களத்திற்கு போய்விட்டு பேசுகிறோம். உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 288 பேர் உயிரிழந்தனர். யாரும் ராஜினாமா செய்யவில்லை. கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
யாரும் அதுபற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். விபத்து விபத்து என சொல்கிறார்கள். எது நடந்திருந்தாலும் உயிரிழப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு தகுந்த நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். அதில் மாற்று கருத்தே கிடையாது" என்றார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் முக ஸ்டாலின் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "போதைப்பொருள் விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
முன்பும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்போது இப்படி நிகழ்ந்திருக்காது. இப்போது 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வரும் முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய மக்களின் விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications