திமுகவினர் பொதுக் கூட்டம் போட்டு என்னை கேவலப்படுத்துறாங்க! அரக்கோணம் கல்லூரி மாணவி கண்ணீர்
அரக்கோணம்: திமுகவினர் பொதுக் கூட்டம் நடத்தி என்னை குற்றவாளி போல் சித்தரிப்பதாக முன்னாள் நிர்வாகி மீது கல்லூரி மாணவி புகார் அளித்து கண்ணீர் மல்க வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி. 21 வயதாகிறது. இவர் அண்மையில் தனது கணவரும் அரக்கோணம் மத்திய திமுக ஒன்றிய முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளருமான தெய்வச் செயல் (40) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என அந்த மாணவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து தெய்வச் செயலின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.
இதனிடையே திமுக அரசை கண்டித்து அரக்கோணத்தில் கடந்த 21 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து மாணவிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.
அப்போது மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி பேசும்போது, பணம் பறிக்கும் நோக்கில் மாணவி செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர். மேலும் மாவட்ட காவல் துறையினர், "மாணவியின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அவரின் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவைக்கு ஆதாரம் இல்லை" என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த மாணவி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் முதலில் காவல் துறையினர் என்னை அசிங்கப்படுத்தினர். தற்போது திமுகவினர் மேடை போட்டு பொதுக் கூட்டத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள்.
நான் யார் மீது புகார் அளித்தேனோ அவர்கள் மீது போலீஸார் இதுவரை விசாரணை நடத்தவில்லை. ஆனால் என்னிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை என்ற பெயரில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.
துணிச்சலுடன் வெளியில் வந்த என்னை குற்றவாளி போல் சித்தரித்து கேவலப்படுத்துகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் புதார் தெரிவிப்பேன் என அந்த மாணவி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications