மாமியார்.. கம்பார்ட்மென்ட்டில் யாருமே இல்லை.. இரக்கமில்லா இதயங்கள்.. ஐயோ குழந்தை.. நம்ம அரக்கோணத்துல
ராணிப்பேட்டை: நாளுக்குநாள் திருட்டு சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.. அப்பாவி மக்களிடம், கழுத்தில் கத்தி வைப்பதும், ஈவிரக்கமில்லாமல் அடித்து தாக்கும் கொடூரங்களும் பெருகி கொண்டிருக்கின்றன. ஒரே நாளில் 2 சம்பவங்கள் நடந்து தமிழக மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துபோவது வழக்கம்.. அதனால், பழனிமலை அடிவாரம் எப்போதுமே பிஸியாக காணப்படும். பஸ் ஸ்டாண்டு, சன்னதி விதி, கிரிவலபாதையில் ஏராளமான முதியவர்கள், மனநல பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றவர்கள் பலரும் சாலையோரத்தில் தங்கியிருக்கிறார்கள்.

பணம்பறிப்பு: இப்படி ஆதரவற்று சாலையோரம் கிடக்கும் இவர்களையும், சிலர் மிரட்டி பணம் பறிக்கிறார்களாம். பணம் தராவிட்டால் அவர்களை கொடூரமாக தாக்கி செல்வதும் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது.
இப்படித்தான் நேற்று விடிகாலை, ஒரு தாத்தா சாலையோரம் படுத்து கொண்டிருந்தார்.. அப்போது குடிகார நபர் ஒருவர், அங்குவந்து தாத்தாவிடம் ரகளை செய்திருக்கிறார். இந்த வீடியோ காட்சி இணையத்திலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்தது.
இரும்பு கம்பி: தாத்தாவிடம் அந்த நபர் பணம் கேட்டதாக தெரிகிறது.. தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதுமே, இரும்பு கம்பிகளால் தாத்தாவை தாக்குகிறார்.. பிறகு, உயிர்பிழைக்க தாத்தா பயந்து கொண்டு ஓடுகிறார்.. இந்த நபரும் தாத்தாவை விரட்டிக்கொண்டே ஓடுகிறார்.. உடனே தாத்தா அங்கிருந்த ஒரு டீக்கடைக்குள் கதறி ஓடுகிறார்.. இதைப்பார்த்து பதறிப்போன டீக்கடையில் இருந்தவர்கள், அந்த குடிகார நபரை தடுத்து நிறுத்த முயன்றும்கூட, தாத்தாவை இரும்பு கம்பியால் அவர் தாக்குகிறார்.
உடனே தாத்தா, குடிகார நபரிடம் தன்னை விட்டுவிடும்படி கையெடுத்து கும்பிடுகிறார்.. பிறகு கெஞ்சுகிறார்.. அப்போதும்கூட, அவரை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அசிங்க அசிங்கமாக திட்டுகிறார் அந்த குடிகார நபர். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அடிவாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை நேற்றிலிருந்து உண்டுபண்ணி வருகிறது.
அரக்கோணம்: இதோ இன்னொரு அக்கப்போரு அரக்கோணம் ரயிலில் நடந்துள்ளது.. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் வினோத். இவர் ரயில்வே பாயிண்ட் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரிக்கு 28 வயதாகிறது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் முத்துமாரி, நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு, தன்னுடைய மாமியார் தனலட்சுமி (56), மற்றும் குழந்தையுடன் அரக்கோணத்திற்கு மின்சார ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர்களது கம்பார்ட்மென்ட்டில் மொத்தம் 5 பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.. அதில் 2 பேர் வழியிலேயே இறங்கிவிட்டார்கள்.
கம்பார்ட்மென்ட்: 30 வயது இளைஞர் ஒருவர் மட்டும் அந்த கம்பார்ட்மென்ட்டில், இவர்களுடன் பயணித்திருக்கிறார்.. மேல்பாக்கம் அருகில் ரயில் சென்றபோது, திடீரென அந்த நபரை, தன்னுடைய முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு, கத்தியை காட்டி முத்துமாரி, தனலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.
இதனால், 2 பெண்களும் பயந்து அலறியுள்ளனர். தங்களிடம் பணம் இல்லை என்றதுமே, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டாராம் அந்த இளைஞர். இதைப்பார்த்து பதறிப்போன மாமியார் தனலட்சுமி, கொள்ளையன் காலிலேயே விழுந்து கெஞ்சியுள்ளார்.. "பணம் தராவிட்டால் குழந்தையின் கழுத்தை அறுத்துவிடுவேன், கம்மலை கழட்டு" என்று முத்துமாரியை மிரட்டியிருக்கிறார்.
கொடுமை: பிறகு, தன்னுடைய அரை பவுன் கம்மலை கழட்டி முத்துமாரி தந்திருக்கிறார். அதற்குள் அரக்கோணம் ஸ்டேஷனுக்குள் ரயில் நுழைய முயன்றதுமே, டக்கென ரயிலிலிருந்து குதித்து தப்பிவிட்டார் அந்த இளைஞர்.. அரக்கோணம் ரயில்வே போலீஸில் முத்துமாரி புகார் தந்திருக்கிறார் என்றாலும், ஈவிரக்கமற்ற செயல்கள் நம்முடைய தமிழகத்தில் இப்படி அதிகரித்து வருவது, பெருத்த கவலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications