பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவிடம் விசாரணை- ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்
பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றி புகார் கூறியவர்களின் ஆவணங்களை சசிகலா கேட்டுள்ள நிலையில் சசிகலாவை சிறையிலேயே சென்று விசாரிக்க ஆறுமுகம் சாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நல பாதிப்புகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 5ஆம் தேதி இறந்துவிட்டார்.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கினார்.

சசிகலாவிற்கு சம்மன்
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள், அரசின் முன்னாள் இன்னாள் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த டிசம்பர் 21ஆம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு இமெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் அவரிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

ராஜா செந்தூர் பாண்டியன்
ஆனால் தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே உள்ள நட்பை கொச்சைப்படுத்தும் விதமாக தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரங்களை கூறினால் மட்டுமே தன்னால் ஆவணங்களை ஒப்படைக்க முடியும் என்றும் கமிஷன் முன்பு ஆஜராக முடியும் என்றும் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் கடந்த ஜனவரி 5ஆம் தேதி மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் தகவல்கள் கிடைத்த 15 நாட்களுக்கு தன்னிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

விசாரணை கால தாமதமாகும்
இதற்கு ஆறுமுகசாமி ஒப்புக் கொண்ட நிலையில் சசிகலா தரப்பு சார்பில் மேலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி இதுவரை விசாரித்தவர்களிடம் தங்கள் தரப்பும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினர். ஆனால் அவ்வாறு நடத்தினால் வழக்கு முடிய இன்னும் 15 ஆண்டுகள் ஆகும்.

சசிகலாவிடம் விசாரணை
சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
சசிகலாவின் கோரிக்கையை ஏற்றால் விசாரணை தாமதமாகும் என்று குறிப்பிட்ட ஆறுமுகசாமி ஆணையம், சசிகலாவை சிறையிலேயே சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு மருத்துவர் பாலாஜி
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த விவரத்தையும் எழுத்துபூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
இதற்கிடையே ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜயகுமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. வெங்கட்ரமணன் வருகிற 30ஆம் தேதியும், விஜயகுமார் 31ஆம்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1ஆம்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2ஆம்தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர். இதேபோல் ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன், பிப்ரவரி 8ஆம்தேதி ஆஜராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5ஆம்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications