தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பாஜக தான் போராடுகிறது.. திமுக, காங்கிரஸை விளாசிய நட்டா
சிதம்பரம்: தமிழ் கலாசாரம் பண்பாடு, மொழியை பாதுகாக்க பாஜக தான் போராடுகிறது. திமுக காங்கிரஸ் கட்சிகள் தமிழ் கலாசாரம், பண்பாடு மொழியை ஒழிக்க முயற்சிக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசினார்.
தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக நேற்று இரவு திருச்சி வந்த ஜேபி நட்டா அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிதம்பரம் தொகுதிக்கு சென்றார்.

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை எதிர்த்து பாஜகவின் கார்த்தியாயினி போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பேசினார்.
அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை ஜேபி நட்டா கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ஜேபி நட்டா பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தமிழ் கலாசாரத்தை கட்டி காத்து வருகின்றனர். இங்கு நான் வந்து நிற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம், சனாதன தர்மத்தை தமிழக மக்கள் காப்பாற்றி வருகின்றனர். ஆனால் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழ் கலாசாரம், பண்பாடு, மொழியை ஒழிக்க கங்கணம் கட்டி கொண்டு செயல்படுகின்றனர்.
தமிழ் மொழி, கலாசாரம் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசும்போதெல்லாம் திமுக, காங்கிரஸ் கட்சியின் வெளியே சென்று விடுகின்றனர். தமிழகத்தின் பெருமைமிகு செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் புறக்கணித்தது. தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க பாஜக தான் பாடுபட்டு வருகிறது.
பாஜக ஆட்சிக்கு முன்பு இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. கொரோனா பரவல் வந்தபோது அதனை திறமையாக கையாண்ட பிரதமர் மோடி நாட்டை பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் நீங்கள் கார்த்தியாயினிக்கு ஓட்டளிக்க வேண்டும். மோடி மீண்டும் பிரதராக வர வேண்டும். அப்போது தான் இந்தியா உலகளவில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்த பிறகு பொருளாதார வளர்ச்சி என்பது 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட செல்போன்களை நாம் பயன்படுத்தினோம். ஆனால் இன்று 97 சதவீத செல்போன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாக உள்ளது. இதுதான் பாஜகவின் செயல்பாடு என்பதை தெளிவான புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
வாகன உற்பத்தியில் ஜப்பான் 2வது இடமும், அமெரிக்கா முதலிடத்திலும் இருந்தது. ஆனால் இப்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒருகாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் இப்போது மலிவு விலையில் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டளித்து கார்த்தியாயினியை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என பேசினார்.












Click it and Unblock the Notifications