விஜயகாந்த் கூட்டணியில் இடம் பெறுகிறது பாஜக?.. ஜவடேகர் சென்னை வருகிறார்
சென்னை: விஜயகாந்த்தை பாஜக விடுவதாக இல்லை. ஜவ்வு மிட்டாய் மாதிரி விஜயகாந்த் இழுத்தடித்தாலும் கூட விடாமல் முயற்சித்தபடி இருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர். மீண்டும் அவர் சென்னை வருகிறாராம். விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசப் போகிறாராம்.
இதுவரை பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்துப் பேசி வந்தனர். இப்போது தேமுதிக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணையும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தேமுதிக தலைமையிலான கூட்டணிக்குத் தனிப் பெயர் சூட்ட விஜயகாந்த் முடிவு செய்திருப்பதால் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக விளங்கி வரும் பாஜக, தமிழகத்தில் மட்டும் கூட்டணியில் கீழே இறங்கி வந்து போட்டியிடும் நிலை உருவாகும்.
இருப்பினும் இதுபோன்று நடப்பது தமிழகத்திற்குப் புதிதல்ல. முன்பு இப்படித்தான் அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டபோது, தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு புதிய பெயருடன் கருணாநிதி கூட்டணியை உருவாக்கினார். அதில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது.
தேமுதிக தனித்துப் போட்டி என்ற முடிவால் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை அதிர்ச்சி அடைந்தன. ஆனால் திமுக அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மக்கள் நலக் கூட்டணியும் இதனால் வருந்தவில்லை. ஆனால் பாஜகதான் ரொம்பச் சிரமப்படுகிறது. விடாமல் தேமுதிகவை இழுக்க முயற்சித்து வருகிறது.
பிரகாஷ் ஜவடேகர்தான் இதில் ரொம்ப வேகமாக உள்ளார். அவரால் கூட்டணியை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்ட பிறகும் கூட தொடர்ந்து முயற்சிக்க விரும்புகிறாராம். அவர் ஏற்கனவே 2 முறை தமிழகத்திற்கு வந்து போய் விட்டார் (ஒருமுறை அதிகாரப்பூர்வமாக, இன்னொரு முறை ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ரகசியமாக). இரண்டு முறையும் அவருக்கு டேக்கா கொடுத்து விட்டது தேமுதிக.
இந்த நிலையில் 3வது முறையாக அவர் சென்னை வரப் போகிறாராம். பாஜகவின் நிலை தமிழகத்தில் ரொம்ப மோசமாகவே உள்ளது. டிவி விவாதங்களில் வரும் பாஜக பிரமுகர்களும், சில ''நடுநிலை விமர்சகர்களும்'' தான்பாஜகவை தூக்கிப் பிடித்து வருகின்றனர். கீழ்மட்டத்தில் நிலைமை ரொம்ப மோசம்.
எனவே தன்னைவிட கொஞ்சம் பெட்டர் நிலையில் இருக்கும் தேமுதிகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டால்தான் கொஞ்சமாவது கெளரவம் மிஞ்சும் என பாஜக நம்புகிறது. இதனால் தான் விஜயகாந்த்தை விட பாஜகவுக்கு மனசு இல்லையாம்.
மேலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் அதன் மூலம் நிச்சயம் திமுக, அதிமுகவுக்கு சற்று நெருக்கடியைத் தர முடியும் என்றும் பாஜக கருதுகிறது. மேலும் வரும் லோக்சபா தேர்தலில் அமைக்கத் திட்டமிட்டுள்ள வலுவான கூட்டணிக்கான அடிப்படையாகவும் இதை பாஜக பார்க்கிறதாம்.
இந்த நிலையில்தான்அடுத்த வாரம் ஜவடேகர் சென்னை வருகிறாராம். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக விற்கு மாற்றாக நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக தேமுதிக உள்பட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தேமுதிக தங்களுடைய நிலைப்பாட்டினை அறிவித்து இருக்கிறது. இருப்பினும் அந்த கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
தேமுதிகவிற்கு ஒரு நிலைப்பாடு இருப்பது போல், பாஜகவிற்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. அதற்கேற்றப்படி, இந்த பேச்சுவார்த்தை நடக்கும். கட்சிகளிடம் பேசுவதற்கு பிரகாஷ் ஜவடேகர் சென்னை வருவார். ஆனால் தற்போது நேர்காணல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின் அவர் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications