இந்தியாவில், மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களில் 28 சதவீதம் பேர் சென்னைவாசிகள்.. அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னையில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், இதனால் இளம்பெண்களின் இறப்பு விகிதம் கூடிவருவதாகவும் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அனுசரிக்கும் வகையில், மெரினா காந்தி சிலை அருகிலிருந்து இன்று காலை மார்பகப்புற்று நோய் விழிப்புணர்வு பேரணி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் சார்பில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்பகப் புற்றுநோய் குறித்து தமிழகப் பெண்களுக்கு விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. மேலும், சென்னைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஆண்டாண்டுக்கு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் சென்னையில்தான் உள்ளனர். அதேபோன்று மார்பகப் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகிய பெண்களில் 67% பேர் இறந்துவிடுகின்றனர். அதனால் மார்பகப் புற்றுநோய் குறித்து முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அவசியம்.
முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குத்தான் மார்பகப் புற்று வரும். ஆனால் தற்போது 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத்தான் அதிக அளவில் இந்த மார்பகப் புற்றுநோய் வருகிறது என்று டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவியர், மருத்துவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications