குன்னூர் போக "பர்ஃபெக்ட்" டைம்.. மேற்குத் தொடர்ச்சி மலையை.. கலர்ஃபுல்லாக்கிய பட்டாம்பூச்சிகள்
குன்னூர்: பட்டாம்பூச்சிகள் இடப்பெயர்வு காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குன்னூர் மலைப் பகுதிகளில் பட்டாம்பூச்சிகள் குவியத் தொடங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு கால நிலையும், பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற அதன் பசுமையும் தான். ஊட்டி, குன்னூர் மலைப் பகுதிகளில் பயணம் செய்வதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நீலகிரிக்கு வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம்.

பண்டிகை, பள்ளி, கல்லூரி விடுமுறை, ஹனிமூன், குடும்பச் சுற்றுலா என்றாலே அனைவரது டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்திருப்பது ஊட்டி, குன்னூராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு எழில் கொஞ்சும் இயற்கை அமைப்பினை கொண்ட பகுதியாக விளங்கி வருகிறது. சிறுவர்களுக்கான பூங்காக்கள், தாவரவியல் பூங்கா, அருவிகள், காட்சி முனைகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அனைத்துப் பகுதிகளும் அமைந்திருக்கும்.
நீலகிரியின் மற்றொரு சிறப்பு மலை ரயில். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபம் கிடைக்கும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். இந்த மலை ரயிலில் பயணிக்க வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால் கோடை சீசனில் சிறப்பு மலை ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நீலகிரிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குன்னூரில் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பட்டாம்பூச்சி கூட்டங்கள் குவிந்து வருகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது வழக்கம். அந்த வகையில், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம்பூச்சிகள் படையெடுத்து வருகின்றன.
குன்னூரில் தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்ற காலநிலை இது என்பதால் குன்னூர் மலைப் பகுதி தற்போது கலர்ஃபுல்லாக காட்சியளிக்கின்றன. குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது 20 வகையான பட்டாம்பூச்சிகள் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு காலம் துவங்கியுள்ளதால் காட்டேரி பூங்கா பகுதிகளில் உள்ள மலர்ச் செடிகளில் நீலப்புலி மற்றும் லிம்னியாஸ் எனப்படும் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. அந்த மலர்களில் உள்ள தேனை உட்கொண்டு வருகின்றன. நீலப்புலி மற்றும் லிம்னியாஸ் வகை பட்டாம்பூச்சிகளுக்கு பெரிய இறக்கைகள் இருக்கும்.
கிட்டத்தட்ட 90 முதல் 100 மில்லிமீட்டர் வரையிலான இறக்கைகளைக் கொண்ட இந்த பட்டாம்பூச்சிகள் காட்டேரி பூங்காவில் குவிந்துள்ளன. சுற்றுலா் பயணிகள் மற்றும் குழந்தைகள் இதனை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications