2 மாதமாக ‘கேப்’.. தவெகவில் சேரவில்லை.. “அரசியலை விட்டு விலகுகிறேனா?” காளியம்மாள் சொன்ன விஷயம்!
தூத்துக்குடி: அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது என்றும், அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் சமூக செயற்பாட்டாளரும், நாதக முன்னாள் மாநில நிர்வாகியுமான காளியம்மாள் கூறியுள்ளார்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சிறந்த பேச்சாளரான காளியம்மாள் விலகியது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் காளியம்மாள் வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. விஜய்யின் தவெகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில் அக்கட்சியிலும் அவர் இன்னும் சேரவில்லை.

காளியம்மாள் பேட்டி
இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், "அரசியலை விட்டு நான் விலகவில்லை. 6 ஆண்டு காலம் குழந்தைகளை கூடப் பார்க்காமல் அரசியல் களத்தில் நின்று இருந்தேன். என் குழந்தைகளே என்னுடன் இல்லை. எனது தாயின் வளர்ப்பில் வளர்ந்துள்ளது. தற்போது குழந்தைகள் எங்கள் ஊரில் பள்ளியில் சேர்ந்து என்னோடு இருக்கின்றனர். இப்போது தான் தேர்வு முடிந்துள்ளது. அவர்கள் கூட இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
எனக்கும் இரண்டு மாத காலம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் திடீரென்று மற்றொரு இடத்திற்கு ஓட முடியாது அல்லவா? ஆனாலும் மக்கள் பணியில் தான் இருந்து கொண்டிருக்கிறேன். அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது. அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு மீட்பு
மேலும் பேசிய காளியம்மாள், "மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கிறோம் என்று அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கச்சத்தீவு என்பது தேர்தல் நேரத்திற்கான ஒரு சொல்லாடல். கச்சத்தீவு என்பது தமிழக மக்களின் சொத்து. இதனை எடுத்துக் கொடுக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை மீட்பு.
நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்து வரும் நிலையில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டத்தை கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடல் சூழலியல் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய பெட்டகம். கடலோர மக்களிடம் எந்தவித கருத்து கேட்கும் ஆகவில்லை.
ஃபெயிலியர் திட்டம்
ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நமது நாட்டில் கடலோர மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிப்பை உணராமல் அனுமதி கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சேது சமுத்திரத் திட்டம் ஃபெயிலியர் திட்டம் என்று அன்று நாங்கள் சொன்னோம். கேட்கவில்லை. 1200 கோடி ரூபாய் மக்களின் வரி பணத்தை கடலில் கொட்டி சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நீங்கள் சொல்கிறீர்கள் பெயிலியர் என்று. அதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் பெயிலியர் என்று இன்றே சொல்கிறோம்." எனக் கூறியுள்ளார்.'
மே மாதத்துக்குள் அறிவிப்பேன்
முன்னதாக ஒரு பேட்டியில் அடுத்து எந்த கட்சியில் சேரப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த காளியம்மாள், "அனைத்து கட்சிகளில் இருந்தும் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கான முடிவை மே மாதத்துக்குள் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications