காவிரி விவகாரத்தில் இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்பு இல்லை - சி வி சண்முகம்
நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே விளக்கம் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் கூறிள்ளார்.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்பு இல்லை என்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இதனால், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சினிமாத் துறையினரும் வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மற்ற அதிகாரிகளும் நேரடியாக டெல்லி சென்றிருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக வாதம், விவாதங்கள் நடைபெற்றன. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம். ஸ்கீம் என்பது பற்றி தற்போதும் எதுவும் சொல்ல முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னர் தான் ஸ்கீம் குறித்து விளக்கம் அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
தீர்ப்புக்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே நதிநீர் பங்கீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்றார். காவிரி விவகாரத்தில் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு நல்ல முடிவு கிடைத்துள்ளது. கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தக் கூடாது என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசு காலம் தாழ்த்த வாய்ப்பு இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிலேயே விளக்கம் உள்ளது என்றும் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications