போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேர் கைது
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபரும் கறுப்புப் பண முதலையுமான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை இன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை ஜனவரி 4ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும்.

சேகர் ரெட்டி அளித்த தகவலின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன், உறவினர் வீடுகள் உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். துணை ராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சேகர் ரெட்டி. அவரது நண்பர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின் முடிவில் சேகர் ரெட்டியும் அவரது நண்பர் சீனிவாசலுவும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரை இன்று சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். பிரேம், ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் 3 பேரையும் ஜனவரி 4ம் தேதி வரை சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
பிரேம் என்பவர் சேகர் ரெட்டியின் நீண்ட நாள் நண்பராவார். இவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் அறிமுகமானவர். சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம்தான் மணல் வியாபாரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
சேகர் ரெட்டியின் கைதுக்குப் பின்னர் வரிசையாக கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் தொடர்பின் மூலம் அமைச்சர்களும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications