ஆளுங்கட்சிக்கும் சாராயம் காய்ச்சுறவங்களுக்கும் தொடர்பு.. சிபிஐ விசாரணை வேணும்.. நிர்மலா சீதாராமன்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர். திமுகவுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக மரணமடைந்தனர். இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர்.

மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள் குடித்ததால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவு, இதில் பலரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்த தமிழகத்தையே இந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 80க்கு மேற்பட்டருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் இது போன்று ஒரு சம்பவம் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் ஆளும் திமுகவுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் 5 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளனர். கடந்த 1971 ஆம் ஆண்டு திமுக மதுவை அறிமுகம் செய்தது. தற்போது தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. அப்படி இருந்தும் கள்ளச்சாராய விற்பனையும் நடந்துள்ளது.
தமிழகம் முழுக்க மதுபானம் எளிதில் கிடைத்த போதிலும் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. கள்ளச்சாராய காய்ச்சுபவர்களுக்கும் ஆளும் திமுகவிற்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்.
எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே இப்போது எங்கே போனார்கள். கள்ளக்குறிச்சியில் 56 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு கருத்து, ஆறுதல் கூட சொல்லவில்லை. சட்டசபையிலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை விவாதிக்க விடாமல் திமுக தடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியரே பொய்யான தகவலை கூறும்போது ஒரு நபர் ஆணையத்தில் மட்டும் எப்படி உண்மை வெளிவரும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும் ஆளும் திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு எதற்கு சிபிஐ விசாரணை என்றும், எல்லாமே வெளிப்படையாக சொல்லிவிட்டதாலும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications