ரூ. 7,000 கோடி விவசாயக் கடன்களைமத்திய அரசால் தள்ளுபடி செய்ய முடியும்.. அய்யாக்கண்ணு
விவசாயிகளின் பயிர்க்கடன்களான ரூ.7,000 கோடியை மத்திய அரசால் தள்ளுபடி செய்ய முடியும் என்று தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாய சங்கங்களின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
டெல்லி: தமிழக அரசால் ரூ.5,500 கோடி விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முடியும்போது மத்திய அரசால் ரூ.7,000 கோடியை மத்திய அரசால் நிச்சயம் தள்ளுபடி செய்ய முடியும் என்று தென்னிந்திய நதி நீர் இணைப்பு விவசாய சங்கங்களின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

தீவிரமடையும் போராட்டம்
மத்திய அரசு அசைந்து கூட கொடுக்காத காரணத்தால், நாளுக்கு நாள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடன் தள்ளுபடி செய்யலாம்
இதுகுறித்து அந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழக அரசு ரூ.5,500 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தபோது மத்திய அரசால் ரூ.7,000 கோடி பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய முடியும். மத்திய அரசுக்கு இது பெரிய தொகையே கிடையாது.

உயிரே போனாலும் திரும்ப மாட்டோம்
இதுகுறித்து தமிழக முதல்வரும், துணை சபாநாயகரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினால் விமோசனம் பிறக்கும். அது வரை எங்கள் உயிரே போனாலும் தமிழகம் திரும்பமாட்டோம் என்றார் அவர்.

பல மாநில விவசாயிகள் ஆதரவு
தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்டம் தற்போது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் மத்திய அரசும் இதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications