வறட்சியால் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறது மத்தியக்குழு... விவசாயிகள் கண்ணீர்
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் குழு ஆய்வு செய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்தியக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.
தஞ்சை: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் குழு இன்று ஆய்வு நடத்தி வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுகிறது. அவர்களிடம் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதாலும் காவிரியில் போதிய அளவு நீர் திறக்கப்படாததாலும் பெரும் வறட்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்த விவசாயிகள் கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மாராடைப்பால் உயிரிழந்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகளின் உயிரிழப்பும் 10 ஐ தாண்டியது.

வறட்சி பாதித்த மாநிலம்
இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

மத்தியக்குழு வருகை
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆய்வு நடத்த மத்திய குழு கடந்த 22ஆம் தேதி தமிழகம் வந்தது. அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் வசுதா மிஸ்ரா, மத்திய செலவினத்துறை மற்றும் நிதி அமைச்சகம் சார்பாக தீனாநாத், மத்திய மின்சாரத்துறை சார்பாக அமித் குமார் உள்ளிட்டோர் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார். மத்திய குழுவினரும் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஏக்கருக்கு 25 ஆயிரம், தொழிளார்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, உயிரிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து நடப்பு ஆண்டில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். தஞ்சையை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்தது.

விவசாயிகளிடம் கேட்ட குழு
பாமணி, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது விளைநிலங்கள் மற்றும் பயிரின் நிலை குறித்து அவர்கள் ஆய்வு செய்ததோடு விவசாயிகளிடமும் கேட்டறிந்தனர்.

கண்ணீர்விட்ட விவசாயிகள்
அப்போது வறட்சியால் பாதிப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். காய்ந்த பயிர்களை காட்டி விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்கிறது.

கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வேண்டும்
இதேபோல் நாமக்கல், கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கருகிய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வறட்சியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications