போன் போட்ட புருஷன்.. ஓடி வந்து போலீஸிடமே அதகளம் செய்த பொண்டாட்டி.. இப்போ என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சென்னை சூளைமேட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் பெண் தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அந்த பெண், அவரது கணவர் மற்றும் அவரது நண்பர் என மூன்று பேரும் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் பெரிய அளவில் தகாத வார்த்தைகளால் பேசி, போலீஸ் என்றாலே பிராடுதான், மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தால் போதை வழக்கு போடமுடியாது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தால்தான் போதை வழக்கு போடமுடியும் என்று அந்த பெண் கடுமையாக பேசியதுடன் கையில் இருந்து பையை எஸ்ஐ மீது தூக்கி எறிந்தார்.

ஆனால் எதற்குமே கோபப்படாமல் அமைதியாக சப்-இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார். இறுதியாக அந்த பெண்ணை அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் ஆகியோர் சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றனர்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யார் இந்த பெண், போலீசை இந்த அளவுக்கு தரக்குறைவாக பேசியது தவறு என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் இதுபற்றி உயர் போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன்படி, போலீசாரை கடுமையாக பேசி, சவால் விட்ட பெண்ணின் பெயர் அக்ஷயா (வயது 30) என்பது அவரோடு இருந்த அவரது கணவர் பெயர் சத்யராஜ் (32) என்பதும் தெரியவந்தது. பெண்ணின் கணவரின் நண்பர் வினோத்குமார் (32) என்பவரும் உடன் இருந்துள்ளார். இதில் சத்யராஜ் அக்ஷயா தம்பதி சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும் வினோத்குமார் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சம்பவம் நடந்தது எப்போது? கடந்த 17-ந் தேதி அன்று இரவு சத்யராஜும், அவரது நண்பர் வினோத்குமாரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்திருக்கிறார்கள். ஒருவர் மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்ட, அதில் கால் வைத்தபடி இன்னொருவர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்தவாறு வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அவர்கள் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் வரும்போது, அங்கு வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த சூளைமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் யார் என்று விசாரணை செய்து கொண்டிருந்தார்.

அவர்கள் இருவரிடமும் சுவாசக்கருவி மூலம் போதையில் இருக்கிறார்களா என்று சப்-இன்ஸ்பெக்டர் சோதிக்க முயற்சித்துள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து தகராறு செய்யதாக கூறப்படுகிறது. அப்போது சத்யராஜ் செல்போனில் மனைவி அக்ஷயாவிடம் நடந்த சம்பவத்தை கூறி வரவழைத்தார். அங்கு உடனே வந்த அக்ஷயா சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாகவும் பேசி தகராறில் ஈடுபட்ட காட்சிதான் வீடியோவாக வந்தது தெரியவந்தது.
இந்த வீடியா காட்சியைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சூளைமேடு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகியோர் மீது சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்போது சத்யராஜ், அவரது மனைவி அக்ஷயா மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications