தமிழக பொறுப்பு டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்றார்
சென்னை: தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த அசோக் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை தொடர்ந்து தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ராஜேந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது.தமிழக பொறுப்பு டிஜிபியாக அவர் இன்றே பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் அவர் தமிழக உளவுத்துறையின் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை அவர் கூடுதல் பொறுப்பாக பார்த்துக் கொள்வார் எனவும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலர் ராம் மோகன் ராவ் வெளியிட்ட அறிவிப்பு:
உளவுத்துறை டிஜிபியாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றதால், அந்தப் பொறுப்பை சென்னை பெருநகர காவல் ஆணையராக உள்ள டி.கே.ராஜேந்திரன் கூடுதலாக வகிப்பார். அத்துடன், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் அவர் கூடுதலாக வகிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக உளவுத்துறை டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. யாக கடந்த 2014ம் ஆண்டு அசோக்குமார் நியமிக்கப்பட்டார். அப்போது டி.ஜி.பி. யாக இருந்த ராமானுஜம் ஓய்வு பெற்றதையடுத்து அந்த பொறுப்புக்கு அசோக்குமார் வந்தார்.
கடந்த ஆண்டு இவரது பதவிக்காலம் நிறைவடைந்து பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக அரசு டி.ஜி.பி. அசோக்குமாருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் டி.ஜி.பி. பதவியிலேயே தொடர்ந்தார். அசோக்குமாரின் பதவிக் காலம் நவம்பர் 4ம்தேதி வரையில் உள்ளது.
இந்நிலையில் அவர் திடீரென டி.ஜி.பி. பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதற்கான கடிதத்தை அவர் அரசிடம் முறைப்படி கொடுத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இரவே அசோக்குமார் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த இருந்த டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications