கூடைப்பந்து விளையாடச் சென்ற மாணவி மதுரையில் திடீர் பலி.. ஊருக்கு திரும்பியபோது பரிதாபம்! என்னாச்சு?
மதுரை: விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்கச் சென்றுவிட்டுத் திரும்பிய சென்னையைச் சேர்ந்த மாணவி, மதுரை ரயில் நிலையத்தில் நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் அபிநந்தனா (15). தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த அபிநந்தனா கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்ற சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். அபிநந்தனா தான் சென்னை அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் விருதுநகர் சென்றனர். அப்போது அபிநந்தனாவுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. காய்ச்சலுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். இருந்தபோதிலும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இதனால், போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.
விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டிகள் முடிவடைந்த பிறகு மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ரயில் மூலம் நேற்று காலை சென்னை திரும்ப திட்டமிட்டனர். விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர்.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், ரயில் நிலையம் முன்பு திடீரென அபிநந்தனா மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர்.

அப்போது, மாணவி அபிநந்தனா இறந்துவிட்டது தெரியவந்தது. இது சக மாணவ மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தகவலறிந்து வந்த திலகர்திடல் போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications