தந்தையின் அனுமதி இன்றி சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தந்தையின் அனுமதி இல்லாமல் சிறுமிக்கு பாஸ்போர்ட் அளிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆர்.ஜெயபாதுரி என்பவர் தனது மகள் எம். விஷ்ணுப்ரியா(9) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். தற்போது கணவரிடமிருந்து பிரிந்து மகள் விஷ்ணு ப்ரியாவுடன் வாழ்ந்து வருகிறேன். மேலும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த நிலையில், வரும் மே 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும் கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளேன்.
அதற்காக எனது 9 வயது மகள் விஷ்ணு ப்ரியாவையும் அழைத்துச் செல்ல இருப்பதால், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தட்கல் முறையில்
பாஸ்போர்ட் பெற அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தேன்.
இருப்பினும், பாஸ்போர்ட் பெற கணவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு விடுமுறை கால நீதிபதி ஆர். சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது, ஜெயபாதுரி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஷ்ணு ப்ரியாவுக்கு பாஸ்போர்ட் அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
