இன்ஸ்டாகிராமில் பழக்கம்! 13 வயது மாணவி கர்ப்பம்! தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலை
செய்யாறு: சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பழகிய 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடந்தது.
செய்யாற்றை சேர்ந்த லாரி டிரைவர் முரளி (22 வயது பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது பள்ளி மாணவி பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை நேரில் வர சொன்னாராம் முரளி. ஆனால் அதற்கு அந்த மாணவி முதலில் மறுத்ததாக தெரிகிறது. அப்போது முரளி, மாணவியிடம் எதை எதையோ சொல்லி, அதாவது அவரை தனியே வரவழைக்க என்னென்ன முயற்சிகளை எடுக்க முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளார்.
இறுதியாக அந்த மாணவியும், முரளி சொன்ன இடத்திற்கு சென்றாராம். அங்கு வைத்து அந்த நபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என்றும் மீறினால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என முரளி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்த மாணவி, தன்னை முரளி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மாணவியிடம் விசாரித்த போது, இன்ஸ்டாகிராமில் பழகிய முரளி தன்னை பலாத்காரம் செய்து மிரட்டியதாக கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸார் முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
இது போல் மற்றொரு சம்பவம்: தேனி அருகே பள்ளி மாணவி தனது கர்ப்பத்தை மறைக்க தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவி. இவரை 7ஆம் வகுப்பு படிக்கும் போது அதே கிராமத்தை சேர்ந்த மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் காதலித்தாராம். இதை அறிந்த மாணவியின் பெற்றோர், மணி மீது போலீஸில் புகார் செய்துள்ளனர்.
இதனால் அவர் மாணவியை சந்திக்காமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது பிளஸ் 1 படிக்கும் அந்த மாணவியை சந்தித்த மணி, தான் அவரை காதலிப்பதாகவும், இதற்கு மறுத்தால் காதலிக்கும் போது எடுத்த பழைய புகைப்படங்களை பெற்றோருக்கு அனுப்புவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் வேறு வழியில்லாமல் அஞ்சிய அந்த மாணவி, மணியுடன் பழகியுள்ளார். இதை நல்ல சந்தர்ப்பமாக கருதிய மணி, அந்த மாணவியை தனியே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தாராம். ஆனால் இதை வீட்டில் சொல்லாமல் இருந்தார். நாளடைவில் வயிறு பெரியதாகியதால், மாணவியின் தாய் கேட்ட போது மாணவி, நடந்தவற்றை எல்லாம் கூறினார். அப்போது தாய் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து தந்தையிடம் கூறிவிடுவாரோ என அஞ்சிய மாணவி, வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அந்த சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவி அளித்த புகாரின்பேரில் முரளி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications