சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய தலைமைச் செயலாளர் இறையன்பு! ஜப்பான் பயணம் என்னாச்சு?
சென்னை: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுடன் வெளிநாடு புறப்பட்டுச் சென்றிருந்த தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். சிங்கப்பூரிலிருந்து நேராக தமிழகம் திரும்பியுள்ளார்.
முதல்வர் சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் புறப்பட்டுச் சென்ற நிலையில் அவர் அந்த பயணத்தில் பங்கேற்காமல் தமிழகம் திரும்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

இதனிடையே இன்று சென்னையில் நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியத்துடன் தலைமைச் செயலாளர் இறையன்புவும் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 23ஆம் தேதி புறப்பட்டு சென்றார்.
அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். சிங்கப்பூரில் முதல்வருடன் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட இறையன்பு, அங்கிருந்து முதல்வருடன் ஜப்பான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் திரும்பிவிட்டார்.

தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆகியோர் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றிருக்கின்றனர். தலைமைச் செயலாளர் இறையன்பு முதல்வருடன் ஜப்பான் செல்லாததன் காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே ஜப்பானில் உள்ள ஒசாகா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்த்ததுடன் ஒசாகாவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications